மும்பை:மஹாராஷ்டிராவின் பி.எம்.சி., வங்கியில், 4,300 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., கூட்டுறவு வங்கியில், 4,300 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக, ஹவுசிங் டெவலப்மென்ட் இன்ப்ரா நிறுவனர் ராகேஷ் குமார், அவர் மகன் சாரங் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராகேஷ் குமார், வங்கிக் கடனில், 160 கோடி ரூபாய்க்கு மேல், விவா குழுமத்தைச் சேர்ந்த பல நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது, விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, விவா குழும நிறுவனரும், பகுஜன் விகாஸ் அகதி கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.,வான ஹிதேந்திர தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில், அமலாக்க துறை சோதனை நடத்தியது.அதில், 73 லட்சம் ரூபாய், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, விவா குழும நிர்வாக இயக்குனர் மெகுல் தாகூர், 'ஆடிட்டர்' கோபால் சதுர்வேதி ஆகியோரை, அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.மஹாராஷ்டிர அரசுக்கு, பகுஜன் விகாஸ் அகதி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE