ராஞ்சி:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் மோசம்அடைந்துள்ளது. ராஞ்சி மருத்துவமனையிலிருந்து, விமானம் மூலம், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பீஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், 72, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராகவும் உள்ளார். மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில், இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில், 2017-ல், லாலு அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறால், அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதையும், டாக்டர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ராஞ்சி மருத்துவமனை டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதையடுத்து, லாலு பிரசாத் யாதவை, டில்லி எய்ம்ஸ் மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்க முடிவு செய்யப்பட்டது. விமான ஆம்புலன்ஸ் மூலம், டில்லிக்கு அவரை அழைத்துச் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, லாலுவின் மகனும், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளதாவது:நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தை, தற்போது நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என சந்தேகமாக உள்ளது. அவரது உடல் நிலை கவலைஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE