இந்த நாடகம் ஜெயிக்குமா?
சென்னை ராயபுரத்தில், தி.மு.க., சார்பாக, மக்கள் கிராம சபைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி முடித்ததும், பொதுமக்கள் சிலரும் பேச அழைக்கப்பட்டனர்.அப்போது பேசியவர் எல்லாம், சொல்லி வைத்தது போல, தி.மு.க., பெருமையை பேசினர்.அங்கிருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 'ரெடி, ஸ்டார்ட், ஆக் ஷன் மட்டும் தான், சத்தமா சொல்லலை... மற்றபடி, சொன்னபடி எல்லாரும் சரியா நடிக்கிறாங்க... இந்த நாடகம்
ஜெயிக்குமா?' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர் ஒருவர், 'அப்பாவும், பிள்ளையும் சினிமாவில் நடிச்சதையே மக்கள் விரும்பலை... அரசியலில் எப்படியோ...' என்றதும், இருவரும் கமுக்கமாக சிரித்தனர்.
இது பெருமையா?
ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நீட் தேர்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், அரசு பள்ளி மாணவர், 147 மதிப்பெண்ணிலும்; பிற பள்ளி மாணவர்கள், 510 மதிப்பெண் பெற்றும், மருத்துவக் கல்லுாரியில் இடம் பிடித்துள்ளனர் என்பதை பெருமையாகக் கூறலாம்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'பல ஆயிரம் கோடி ரூபாய், அரசு பள்ளிகளுக்கு வழங்கியும், ஆசிரியர்களால், மாணவரை, 510 மதிப்பெண் எடுக்க வைக்க முடியலை என்பது, பெருமையா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிந்தித்தனர்.
'வரலாறு தெரியாதா?'
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையில், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர் ஆகவே முடியாது. ஸ்டாலினை, தமிழக முதல்வராக, மு.க.அழகிரி ஏற்றால், நாங்களும் ஏற்கத் தயார்' என்றார்.அங்கிருந்த கட்சி தொண்டர் ஒருவர், 'யாரை நம்பி, இப்படி சவால் விடுறாரு... தி.மு.க., அதிகாரத்திற்கு வருவதற்காக, யாருடைய ஆதரவை வேண்டுமானாலும் கேட்கும்... அழகிரியிடம் கேட்காதா...' என்றார்.அருகிலிருந்தவர், 'தி.மு.க., வரலாறு தெரியாமல், அமைச்சர் பேசுறாரு...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE