பிப்.,1ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்: எகிறும் எதிர்பார்ப்பு! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிப்.,1ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்: எகிறும் எதிர்பார்ப்பு!

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (7)
Share
மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம், 1ம் தேதி, பார்லிமென்டில் தாக்கல் செய்கிறார். கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, எந்தெந்த துறைகளுக்கு, தாராள நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, இப்போதே எழத் துவங்கிவிட்டது. கொரோனா பரவலால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, நாட்டின்
எகிறும் எதிர்பார்ப்பு , மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம், 1ம் தேதி, பார்லிமென்டில் தாக்கல் செய்கிறார். கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, எந்தெந்த துறைகளுக்கு, தாராள நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, இப்போதே எழத் துவங்கிவிட்டது.

கொரோனா பரவலால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய நிதி ஆண்டில், 4.2 சதவீத வளர்ச்சியை சந்தித்த நம் நாட்டின் பொருளாதாரம், கடந்த, 2020 -- 21ம் ஆண்டில், 7.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.

அனைத்து துறைகளுமேகடும் சரிவை சந்தித்து உள்ள நிலையில், தற்போது கொரோனா தாக்கமும் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்புவதை அடுத்து, பொருளாதாரம் மெல்ல சீரடைய துவங்கிஉள்ளது.இந்த நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 - 22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்., 1ம் தேதி தாக்கல் செய்கிறார்.இதில், எந்தெந்த துறைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


சுகாதாரம்

கொரோனா தொற்று பரவலுக்கு பின், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, மக்கள் மத்தியில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குறைவான செலவில், தரமான சுகாதாரம் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த, 2008 -- 09 மற்றும் 2019 -- 20க்கு இடையிலான காலக்கட்டத்தில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொது சுகாதாரத்திற்கு, மத்திய - மாநில அரசுகள் இரண்டும் சேர்த்து, 1.2 முதல், 1.6 சதவீதம் மட்டுமே நிதி செலவிட்டு உள்ளன. இது, சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிக மிக குறைவாக கருதப்படுகிறது.

சீனா, 3.2; அமெரிக்கா, 8.5; ஜெர்மனி, 9.4 சதவீத நிதியை, பொது சுகாதாரத்திற்காக செலவு செய்கின்றன. எனவே, இந்த பட்ஜெட்டில் பொது சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


கல்வி

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த, பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.


வேளாண் துறை

மூன்று புதிய வேளாண் சட்டங்களை, மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. எனவே, சந்தைபடுத்துதல், சீர்திருத்தங்களுக்கான விவசாய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.உற்பத்தி திறனை அதிகரிக்கவும், அறுவடைக்கு பிறகான நஷ்டங்களை குறைக்கவும், விவசாயிகளுக்கான நிகர லாபத்தை அதிகரிக்க, பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பயிர் காப்பீடு திட்டம், நீர்ப்பாசன உள்கட்டமைப்பு திட்டங்கள், மண்ணின் வளத்தை மேம்படுத்துதல் மற்றும் பண்ணை கடனுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ராணுவம்

கிழக்கு லடாக்கில், இந்திய - - சீன படைகளுக்கு இடையே, எட்டு மாதங்களுக்கும் மேலாக தொடரும் மோதல் போக்கு, விரைவில் முடிவுக்கு வருவதற்கான சூழல் இல்லை. இரு தரப்பினரும், படைகளை திரும்பப் பெறுவது குறித்து நடத்தப்படும் பேச்சில், இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எனவே, 2020 - 21ம் நிதியாண்டில், ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட, 3.23 லட்சம் கோடி ரூபாய் நிதி, நடப்பு ஆண்டில் கணிசமாக உயர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது.


உற்பத்தி துறை

சுயசார்பு இந்தியா மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்து வருவதை அடுத்து, இந்த பட்ஜெட்டில், உற்பத்தி துறை சிறப்பு கவனம் பெறுகிறது. கொரோனா ஊரடங்கால், உற்பத்தி துறை சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள, பட்ஜெட்டில் அதிக அளவிலான ஊக்கத்தொகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரித்து, இத்துறையை நெருக்கடியில் இருந்து மீட்க, பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் என, தொழில் துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


வங்கி

நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை, 27 ஆக இருந்தது. பல்வேறு வங்கிகள் இணைப்பின் வாயிலாக, இந்த எண்ணிக்கை, 12 ஆக குறைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், மேலும் பல பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை நான்காக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


பெண்கள்

முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு அடுத்தபடியாக, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் அமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன் பெறுகிறார். எனவே, பெண்களை திருப்திபடுத்தும் விதமாக, மளிகை பொருட்கள், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தங்கம் மீதான வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.


வரி குறைப்பு

தனி நபர் வருமான வரி குறைப்பு குறித்து, பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள வேலை இழப்பு மற்றும் தொழில் முடக்கம் ஆகியவற்றில் இருந்து, சிறிய நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரியில் சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X