சோதனைகளை வென்று சாதனை!| Dinamalar

சோதனைகளை வென்று சாதனை!

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (2) | |
நம் நாடு, குடியரசு ஆகி, 71 ஆண்டுகள் நிறைவடைந்து, 72வது ஆண்டில், நாளை மறுநாள் அடி எடுத்து வைக்க உள்ளோம். இத்தனை ஆண்டுகளும், நமக்கென தனி அரசியல் சட்டம், தனி ராணுவம் என, தனித்து செயல்பட்டு வந்துள்ளோம். இந்த காலக்கட்டத்தில் பல வித சோதனைகளை, நம் நாடு சந்தித்து வந்துள்ள போதிலும், நமக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்... அது, 'இத்தனை ஆண்டுகளில் நாம் முன்னேறி இருக்கிறோமோ; உலக
உரத்த சிந்தனை,  சோதனை, சாதனை

நம் நாடு, குடியரசு ஆகி, 71 ஆண்டுகள் நிறைவடைந்து, 72வது ஆண்டில், நாளை மறுநாள் அடி எடுத்து வைக்க உள்ளோம். இத்தனை ஆண்டுகளும், நமக்கென தனி அரசியல் சட்டம், தனி ராணுவம் என, தனித்து செயல்பட்டு வந்துள்ளோம்.

இந்த காலக்கட்டத்தில் பல வித சோதனைகளை, நம் நாடு சந்தித்து வந்துள்ள போதிலும், நமக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்... அது, 'இத்தனை ஆண்டுகளில் நாம் முன்னேறி இருக்கிறோமோ; உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு எந்த அளவுக்கு உள்ளது...' என கேட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு பதில் தான், இந்த கட்டுரை. ஆம். இத்தனை ஆண்டுகளில் நாமும், நம் நாடும் எத்தனையோ மடங்கு முன்னேறித் தான் உள்ளோம் என்பதை, இந்த கட்டுரை உரக்க சொல்கிறது.

அதற்காக, மலைக்க வைக்கும் புள்ளி விபரங்களை அள்ளி விட்டு, 'வளர்ந்து விட்டோம் பார்த்தீர்களா...' என, சொல்லப் போவதில்லை.'அந்த காலத்துல, உங்க தாத்தாவுக்கு, 30 ரூபாய் தான் சம்பளம். அதிலேயே நான், 10 ரூபாய் மிச்சம் பிடிப்பேன்; தங்கமாக வாங்கி சேமிப்பேன்'னு பெருமையா சொல்லுவாங்க எங்க பாட்டி.உண்மை தான். தங்கத்தின் மீது நம் மக்கள் கொண்ட ஆசை, இந்தியாவை உலக அளவில், அதிக தங்கத்தை, நகைகளாக இருப்பு வைத்திருக்கும் நாடு என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது.

உலகில் எந்த நாட்டவருக்கும் இல்லாத பெருமை, நம் நாட்டவருக்கு உண்டு. குறைந்தபட்சம், 1 சவரன் நகை கூட இல்லாத ஆட்களே இல்லை எனலாம்.ஏழைப் பெண்கள் அணியும் தாலியில் கூட, 1 சவரன் தங்கம் இருக்கிறது. அப்படியே, 130 கோடி மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை கணக்கிட்டால், உலகின் பணக்கார நாடு நாம தாங்க!

அது மட்டுமா... காலம் காலமாக, நம் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, தங்கள் தேவைக்கு போக, மீதமுள்ளதை கோவில்களுக்கு, சுவாமி அல்லது அம்பாளுக்கு தங்க ஆபரணங்களாக அணிவித்து மகிழ்ந்துள்ளனர். நம் கோவில்களில் உள்ள தங்கத்தின் மதிப்பை வைத்து, பக்கத்து நாடுகள் பலவற்றை விலைக்கு வாங்கி விடலாம்.விதவிதமான உணவுஅது மட்டும் தானா... சுதந்திரம் அடைந்த புதிதில், இந்தியர்கள் என்றாலே ஏழைகள்; படிப்பறிவில்லாதவர்கள்; பண்பாடு தெரியாதவர்கள் என, ஆங்கிலேயர்கள் எண்ணியிருந்த நிலையில், இப்போது, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் நாம்.

ஆம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் போல, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், கனடா போன்ற பல நாடுகளில், இந்தியர்கள் தான், முக்கிய பதவிகளில் உள்ளனர். இதை விட, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசே நம்மவர் தாங்க. எண்ணிப் பார்க்க முடியுமா... இந்திய கிராமம் ஒன்றில் பிறந்த பெண், அமெரிக்க துணை அதிபர் ஆக முடியும் என... அந்த சாதனையையும் படைத்துள்ளோம் நாம்.

கொஞ்சம் சற்று பின்னோக்கி பார்ப்போம். 1960களில் மிகப்பெரிய பஞ்சம். கொத்து கொத்தாக மக்கள், பட்டினியால் மடிந்தனர். அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட மக்காச்சோளம், தாவர எண்ணெய் தான் நம் பள்ளிக் குழந்தைகளையும், அவர்களை நம்பி இருந்த பெற்றோரையும் காப்பாற்றியது.அதன் பின், நம் வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்த பசுமைப் புரட்சியால், இன்று, பஞ்சம் என்பதே நாட்டில் கிடையாது. பட்டினிச் சாவு என்பதே அனேகமாக இல்லை.

அந்த காலத்தில், வெறும் சோறும், தண்ணீரும் சாப்பிட்டு, குடித்து வளர்ந்த நாம் இப்போது, எவ்வளவு விதவிதமான உணவுகளை சாப்பிடுகிறோம்; எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.அது மட்டுமின்றி, கொரோனா கோர தாண்டவம் ஆடிய காலத்திலும், செப்., 2020ல், நம் விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதி, 9,296 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 81.7 சதவீதம் அதிகம்.

கொரோனா காலத்திலேயே இவ்வளவு சாதனையா என ஆச்சர்யமாக உள்ளதா... ஆம். இது தான் இந்தியா.இந்த, 71 ஆண்டுகளில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் பக்கத்து நாடுகளான ஆப்கன், இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற பல நாடுகளில், ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறியதை நாம் அறிவோம். ஆனால், நம் நாட்டில், இன்னமும், சிங்கமென ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது.

பக்கத்து நாடுகளில், 'எப்போது நம் வீட்டின் மீது குண்டு விழுமோ...' என மக்கள் பயந்து கொண்டிருக்க, நாம் நிம்மதியாக இருக்கிறோம். காரணம். இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் ராணுவம் என்றால் மிகையில்லை. குடியரசாக மலர்ந்த காலத்தில், ராணுவத்திற்காக நாம் செலவிட்டது, நம் மொத்த பட்ஜெட் தொகையில், 1 - 2 சதவீதம் மட்டுமே. ஆனால், இப்போது, 18 - 20 சதவீத தொகையை, ராணுவத்திற்காக செலவழிக்கிறோம்.

நட்பாக உள்ள நம் அண்டை நாடுகளில் ஒரு பிரச்னை என்றால், நம் ராணுவ வீரர்கள் தான், அங்கு சென்று அமைதியை ஏற்படுத்துகின்றனர். இந்திய பெருங்கடல் முழுக்க, இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.இந்த பெருமையை, 71 ஆண்டுகளுக்கு முன், நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா...இந்தியா ஒரு ஏழை நாடு என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க, வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக, நாமும், சந்திரனுக்கு மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்திற்கே விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி விட்டோம்.
பணக்கார ஐரோப்பிய நாடுகள் பலவும், விண்வெளி தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்க, நாம், பல மைல் கற்களை கடந்து வந்துவிட்டோம். பல நாடுகள், தங்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன் தவம் கிடக்கின்றன.இந்தியாவின், 'டெட்ராய்டு'இப்படி, பல நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியதில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,245 கோடி ரூபாயை கட்டணமாக பெற்றுள்ளோம்.இப்படி, எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல், எல்லாவிதமான வழிகளையும் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் இந்த, 71 ஆண்டுகளில் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருமைக்குரியது தானே!

'சரிங்க, தேசிய அளவில் நாம் வளர்ச்சி அடையத் தான் செய்துள்ளோம்; நம்ம தமிழகத்தில் எப்படி...' என கேட்கிறீர்களா; தமிழகமும் சிறப்பாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மாநிலமாக, பொருளாதாரத்தில் விளங்குவது தமிழகம் தான். அது மட்டுமல்ல, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மூன்றாவது இடம் வகிப்பதும் நம் மாநிலம் தான்.அதற்கு காரணம், நம் தலைவர்கள் என்றால் மிகையில்லை.

கடந்த, 1964ல், 'பெல்' எனப்படும், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், திருச்சி அருகே செயல்படத் துவங்கியது.அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், ஏராளமான அன்னியச் செலாவணி கிடைக்கவும், பல ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் போட்டவர், அப்போதைய முதல்வர் காமராஜர். அதற்கு முன், பெல் நிறுவனத்திற்காக பல மாநிலங்களில், பல இடங்களை, மத்திய அரசு தேடி வந்தது.

அதற்காக சில தேவைகளை, மத்திய அரசு பட்டியலிட்டிருந்தது. அத்தனையும் செய்து, அந்த பிரமாண்ட தொழில் திட்டம், தமிழகத்திற்கு வர உதவியாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் காமராஜர்.அதுபோலவே, கார் தொழிற்சாலைகளின் தலைமையகம் என போற்றப்படும் அளவுக்கு, தமிழகத்தில், கார் உற்பத்திக்கு நம் முதல்வர்கள் அடித்தளம் இட்டுள்ளனர். இப்போது, இந்தியாவின், 'டெட்ராய்டு' என, தமிழகம் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், மாநில வளர்ச்சி மீது இரு தரப்பினரும் சற்று கவனமாகவே இருந்துள்ளனர்; அதற்கு காரணம், தமிழக மக்கள் தான். மாநில நலனுக்கு எதிரான எந்த அரசியல் கட்சியையும், நம் மக்கள் வளர விட்டதே இல்லை. அதற்கு, இந்த, 71 ஆண்டுகளில் பல கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் உதாரணமாக காட்டலாம்.

மேலும், நம் மாநிலத்தில் இருக்கும், தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் மனித வளமும், மற்றொரு முக்கியமான காரணம்.நாட்டிலேயே மிகப் பெரிய, கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலை, நம் தமிழகத்தில் தான் அமைந்துள்ளது. இது இன்றோ, நேற்றோ துவங்கப்பட்டது அல்ல; 16 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு, 10 ஆண்டுகளாக, பல கோடி லிட்டர் தண்ணீரை வழங்கி வருகிறது.

அதுபோன்ற, மேலும் இரண்டு ஆலைகள் வருவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைப் பற்றி, வெளிநாடுகளில் மட்டுமே நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்போது, நம் மாநிலத்திலேயே அந்த திட்டம் உள்ளது.


நோய் எதிர்ப்பு சக்தி

நுாறுக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளால், நம் பூமியில், பொன்னாக விளைகிறது. அம்பாரம், அம்பாரமாக நெல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வேலை தேடி, நம் மாநிலத்தவர், பிற மாநிலங்களுக்கு சென்ற நிலைமாறி, வட மாநிலங்களில் இருந்து ரயில் ரயிலாக, இளைஞர்கள் தமிழகம் வந்து, வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.இதுபோல ஏராளமான உதாரணங்களை, நம் தமிழகமும் முன்னேறி இருக்கிறது என்பதற்கு கூறலாம்.

இவ்வளவு ஏன்... சமீபத்திய உதாரணமாக, கொரோனாவையே கூறலாம். உலக நாடுகள் அனைத்தும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில், பெரும்பாலும் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டன; நம் தமிழகமும் பாதிக்கப்பட்டது.ஆனால், தமிழகம் மீண்டு விட்டது. எப்போதோ மீண்டு விட்டது என கூறப்பட்ட கேரளா, இன்னும் கொரோனாவில் உழன்று கொண்டுள்ளது. அதற்காக, நம் மாநிலத்தில் கொரோனா ஒழிந்து விட்டது என கூற முடியாது. அதை கணிசமாக ஒடுக்கியது, தமிழகத்தின் சாதனை தான். இதன் பெருமை, ஆட்சியாளர்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை;தமிழக மக்களுக்கும் உரித்தானதே!

சுத்தத்திலும், சுகாதாரத்திலும் மேம்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இன்னமும் கொரோனா என்ற பூதம் தன் கைகளை அகல விரித்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகிறது. ஆனால், நம் நாட்டில், படிப்படியாக குறைந்து, பலி எண்ணிக்கையும், நோய் தொற்றும் வீழ்ச்சி அடைந்து விட்டது.வளர்ந்த நாடுகளில் மருத்துவ வளர்ச்சியும் அதிகம் இருக்க, இதையெல்லாம் தாண்டி, அந்த நோய், நம் நாட்டில் அவ்வளவாக பரவவில்லை; பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை; கட்டுக்குள் வந்து விட்டது என்றால் இயற்கை நமக்கு கொடுத்த நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு காரணம்.

இப்படி பல விதங்களில் நாம் முன்னேறியுள்ளோம்; முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கு இந்தியர்களின் மூளையும், இறைவனின் கருணையுமே காரணம். ஏனெனில், பிற நாடுகளில், ஒன்றிரண்டு தெய்வங்களை வழிபடுகையில், நாம் ஓராயிரம் தெய்வங்களை வணங்குகிறோம்; உண்மையாக உழைக்கிறோம். உலகில் மேன்மை அடையத் தான் செய்வோம்.

எனினும், நம் நாட்டிற்கும் பல பாதகங்கள் வரத் தான் செய்தன. அண்டை நாடுகள் படையெடுத்தன. இயற்கை பேரழிவுகளான பூகம்பம், சுனாமி போன்றவை வரத் தான் செய்தன. நம் மக்களின் தெய்வ நம்பிக்கையாலும், இடையறாத உழைப்பாலும், வீரர்களின் தீரத்தாலும் அவற்றை வெற்றி கண்டுள்ளோம்.

இதெல்லாம் ஏதோ நீங்களும், நானும் சேர்ந்து செய்ததல்ல; இந்த தேசத்தின் ஆன்மா செய்து வரும் காரியம். அந்த வகையில், இன்னும், 29 ஆண்டுகள் கழித்து, நம் நாட்டின், 100வது குடியரசு நாளில், நம் இந்தியா, உலகில் உன்னத நிலையை அடைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.முன்னேறிய பின், பின்நோக்கிப் பார்ப்பதில் இனிமை உள்ளது. அந்த வகையில், 71 ஆண்டு பின்னோக்கிய பார்வையில், நம் முன்னேற்றம் தெரியத் தான் செய்கிறது!
ஸ்ரீவித்யா தேசிகன்
ஆடிட்டர், எழுத்தாளர்
தொடர்புக்கு:இ - மெயில்: desikan.srividhya@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X