சென்னை:லட்சத்தீவு அருகே, கடலில் தத்தளித்த, துாத்துக்குடியைச் சேர்ந்த, சரக்கு கப்பல் குழுவினர் ஏழு பேரை, இந்திய கடலோர காவல் படையினர், பாதுகாப்பாக மீட்டனர்.
கடலோர காவல் படையின் செய்திக்குறிப்பு:துாத்துக்குடியில் இருந்து, 19ம் தேதி, லட்சத்தீவு அருகே உள்ள கவரட்டி என்ற துறைமுகத்திற்கு, சரக்கு கப்பல் புறப்பட்டுள்ளது. இந்தக்கப்பலில், ஏழு பேர் பயணித்துள்ளனர். கப்பல், லட்சத்தீவு அருகே, நேற்று காலை, 5:00 மணியளவில் சென்றபோது, கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, மூழ்கத் துவங்கியது.
இதையடுத்து, கப்பலின் உரிமையாளருக்கு, அந்த குழுவினர் தகவல் அளிக்க, அவர் துறைமுக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். துறைமுக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கல்பேணி துறைமுகத்திற்குள் செல்ல, அந்த கப்பலை அறிவுறுத்தி உள்ளனர். இருந்தாலும், அந்த கப்பலால் துறைமுகத்திற்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல் சுஜீத், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, கப்பலில் உள்ள ஏழு பேரை, பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டது.
மீட்பு உதவிக்கு, கொச்சியில் இருந்து விமானமும் அனுப்பப்பட்டது.கடலோர காவல் படையும், விமானமும் துரிதமாக செயல்பட்டு, கடலில் தத்தளித்தவர்களை பாதுகாப்பாக மீட்டு, கல்பேணி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE