சென்னை:நர்ஸ் பிரசவம் பார்த்ததால், உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்; மனைவி அகிலா. இவர், நிறைமாத கர்ப்பிணியாக, திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்றுஉள்ளார். அங்கு, நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததில், அகிலா உயிரிழந்தார். டாக்டர்களின் அஜாக்கிரதையை கண்டித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம், 2019ல், வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:இந்த சம்பவத்தில், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறிய, டாக்டர்கள் கலைச்செல்வி, ஜெனிபர் ஆகியோர், பலியான பெண்ணின் கணவருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டு டாக்டர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார மையங்களில், பிரசவத்துக்கு வருபவர்களை கவனிக்க, 24 நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க, அனைத்து டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு, முறையான பயிற்சியை, அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE