கோவை:''என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது,'' என, முதல்வர் பழனிசாமி., பேசினார்.
முதல்வர் பழனிசாமி., இரு நாட்கள் பயணமாக, நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். நேற்று காலை கோனியம்மன் கோவிலில் தரிசனம் செய்து, பிரசாரத்தை துவக்கினார். பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள ஜமாத்தார்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், முதல்வர் பேசியதாவது: நாட்டிலேயே மிகவும் அமைதியான ஆட்சி நடப்பது, தமிழகத்தில் தான். எம்.ஜி.ஆர்., காலம் துவங்கி, இன்று வரை, சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க., பெரும் அரணாக இருந்திருக்கிறது. இங்கு, நான் அரசியலுக்காகப் பேசவில்லை. மனதில் பட்டதைப் பேசுகிறேன். மத்திய அரசு கொண்டு வரும் சில சட்டங்கள் குறித்து, ஜமாத் நிர்வாகிகள் பலரும் என்னிடம் அச்சம் தெரிவித்தனர்.
முஸ்லிம்களை எந்தச் சூழ்நிலையிலும், நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது; என்னை அடிமையாக்கவும் முடியாது. பதவி என்பது எனக்குத் தோளில் போடும் துண்டுதான்.இவ்வாறு, அவர் பேசினார்.
கோவை ராஜ வீதி, செல்வபுரத்தில் முதல்வர் பேசியதாவது:ஜெ., மறைவுக்கு பின், நடக்கும் சட்டசபை தேர்தல். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும். என் முன் நிற்கும் அனைவரையும் முதல்வராக பார்க்கிறேன். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, நாட்டு மக்களே முதல்வர்கள். மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே, எங்கள் அரசின் நிலைப்பாடு.
ஸ்டாலின் வந்த வழி வேறு; நாங்கள் வந்த வழி வேறு.நாங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு, உயர்ந்துள்ளோம். அவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கப் பார்க்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.
'பிரியாணி வந்துடும்!'
கோவை குறிச்சி பிரிவில், முஸ்லிம்கள் மத்தியில் முதல்வர் பேசுகையில், ''முஸ்லிம் சமுதாயத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். ரம்ஜான், பக்ரீத் என்றால், என் வீட்டிற்கு கண்டிப்பாக பிரியாணி வந்துவிடும். முதல்வர் இல்லத்தில் தினமும், 300 பேர் சாப்பிடுவர். அனைவருக்கும் சேர்த்தே, பிரியாணியை நண்பர்கள் அனுப்பிவிடுவர்,'' என்றார்.
மீண்டும் துளிர்க்கும்'கட் - அவுட்' கலாசாரம்!
முதல்வர், பழனிசாமி.,கோவை, ராஜவீதியில் பிரசாரத்தை துவக்கினார். அவர் பயணித்த வழித்தடங்களில், இருபுறமும் சாலைகளை தோண்டி, உருட்டுக் கட்டைகளை ஊன்றி பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்களில், வட்ட வடிவிலான பிளக்ஸ்கள் கட்டப்பட்டிருந்தன. செல்வபுரம், கோவைப்புதுார் பகுதியில், புதிதாக போடப்பட்ட சாலையில், ஜம்பர்களால் துளையிட்டு, கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன.
செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பில், எம்.ஜி.ஆர்., - ஜெ., - பழனிசாமி., - பன்னீர்செல்வம்., - வேலுமணி ஆகியோரது, பிரமாண்டமான, 'கட் - அவுட்'கள் வைக்கப்பட்டிருந்தன. இதே போன்ற, 'கட் - அவுட்'டுகள் வடவள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. காற்றில் இவை சரிந்து விழுந்தால், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவது நிச்சயம். மேலும், கோர்ட் உத்தரவை மீறிய செயல் என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆளுங்கட்சியினரே இவற்றை வைத்திருந்தது, பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE