பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், பார்லிமென்டில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர், வரும், 29ல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, நேற்று பார்லிமென்ட் வளாகம் முழுதும், ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வை யிட்டார். அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும்படியும், அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
லோக்சபா சேம்பர், மைய மண்டபம், நடைபாதை, உள்வட்ட மற்றும் வெளிவட்ட சுற்றுப்பாதைகள், எம்.பி.,க்கள் காத்திருப்பு அறைகள், உணவகங்கள், பத்திரிகையாளர்கள் அறை என ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தார்.பட்ஜெட் கூட்டத் தொடரில், எம்.பி.,க்களுக்கு வழங்கப்படவுள்ள உயர்ரக முக கவசம் மற்றும் முன்னெச்சரிக்கை பொருட்கள் அடங்கிய பெட்டி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.
அல்வா கிண்டும் நிகழ்ச்சி
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன், 2021 - 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, பிப்., 1ல் தாக்கல் செய்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த ஆண்டு காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அச்சிடும் முறைக்கு பதிலாக, மின்னணு முறையில், பட்ஜெட் ஆவணங்களை, எம்.பி.,க்களுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் ஆவணங்களை தொகுக்கும் பணிகள் துவங்குவதை குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நிதி அமைச்சகம் சார்பில், அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நேற்று, அல்வா கிண்டும் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிதித் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே, பொருளாதார விவகார செயலர் தருண் பஜாஜ், தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.மேலும், எம்.பி.,க்களும், பொதுமக்களும் பட்ஜெட் ஆவணங்களை பார்க்கும் வகையிலான, 'யூனியன் பட்ஜெட்' என்ற மொபைல் செயலியை, நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE