மற்ற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி: மோடி பெருமிதம் | Dinamalar

மற்ற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி: மோடி பெருமிதம்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (12)
Share
கோல்கட்டா:சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, ''இந்தியா, தற்சார்பு நிலையை எட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனாவுக்கான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும் நாம் வழங்கி உதவுவதை பார்த்து, பெருமைப் பட்டிருப்பார்,'' என, குறிப்பிட்டார்.மேற்கு வங்கத்தில்,
கொரோனா தடுப்பூசி,  மோடி பெருமிதம், பிரதமர் பெருமிதம்,   மோடி, பிரதமர் மோடி

கோல்கட்டா:சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, ''இந்தியா, தற்சார்பு நிலையை எட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனாவுக்கான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும் நாம் வழங்கி உதவுவதை பார்த்து, பெருமைப் பட்டிருப்பார்,'' என, குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபைக்கும், வரும், ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், தலைநகர் கோல்கட்டாவில், நேதாஜியின், 125வது பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தலைவணங்குகிறேன்

முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜக்தீப் தன்கர் பங்கேற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாடு, தற்சார்பு நிலையை எட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும், நாம் வழங்கி உதவுவதை பார்த்து பெருமைப் பட்டிருப்பார்.

நேதாஜியின் பிறந்த நாள் விழா, இனி ஆண்டுதோறும், 'பராக்கிரம திவஸ்' எனப்படும், வீரதீரர் தினமாக கொண்டாடப்படும். நாட்டின் வீரத்துக்கு, அவர் உந்துசக்தியாக இருந்துள்ளார்.சுதந்திர போராட்டத்தின்போது, புதிய வடிவத்தில், அதை நேதாஜி சந்தித்தார். நேதாஜியை உருவாக்கிய இந்த மண்ணுக்கு தலைவணங்குகிறேன்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும், அவரது தாக்கம் இருக்கும். சுதந்திரத்துக்காக அவர் செய்த தியாகங்கள், பங்களிப்பை, நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.எல்லை பிரச்னைகளில், இந்தியாவின் வலிமையை உணர்த்தும் புதிய அவதாரத்தை, உலக நாடுகள் பார்த்து வருகின்றன; இதற்கு, நேதாஜி விதைத்த வீரமே காரணம். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றால், தகுந்த பதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது.

பெண்களின் வளர்ச்சி, சுய முன்னேற்றத்துக்கும், நேதாஜி காரணமாக இருந்துள்ளார். பெண்களின் உரிமை குறித்து பேசப்பட்ட காலத்தில், ராணி ஜான்சி படைப் பிரிவை உருவாக்கி, சுதந்திர போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தினார்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.

முன்னதாக, தேசிய நூலகத்தில் உள்ள நேதாஜியின் சிலைக்கு, மோடி மலரஞ்சலி செலுத்தினார். இங்கு, 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் உருவாக்கியுள்ள, 120 அடி நீள ஓவியத்தை பார்த்து ரசித்தார். இதைத் தவிர, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.


பேச மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். விழாவில் அவர் பேசத் துவங்கிய போது, கூட்டத்தில் இருந்த சிலர், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டனர்.இதனால் கடும் கோபம் அடைந்த மம்தா, ''இது அரசு விழா; அரசியல் விழா அல்ல. கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கோஷமிடுவது, அவமதிப்பதாக உள்ளது. அதனால், நான் பேச மாட்டேன்,'' என்றார்.


'நான்கு தலைநகரங்கள் தேவை'

நேதாஜியின் பிறந்த நாளையொட்டி, கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார்.அதற்கு போட்டியாக, பேரணி ஒன்றை, முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தினார். கோல்கட்டாவில், 7 கி.மீ., துாரத்துக்கு நடந்த பேரணியின் முடிவில், மம்தா பானர்ஜி பேசியதாவது:ஆங்கிலேயர் ஆட்சியின்போது, நாட்டின் தலைநகராக கோல்கட்டா இருந்தது. நாட்டின் தலைநகராக, ஒரு நகரம் மட்டும் தான் இருக்க வேண்டுமா.

நாட்டின் தலைநகராக, நான்கு நகரங்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். பார்லிமென்ட் கூட்டத் தொடர்களையும், நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும்.நேதாஜியின் பிறந்த நாள், 'பராக்கிரம திவஸ்' என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளனர். யாரைக் கேட்டு இந்தப் பெயரை சூட்டினர். அரசியல் ரீதியாக என்னை பிடிக்காவிட்டாலும், என் ஆலோசனையையும் கேட்டிருக்க வேண்டும்.

நேதாஜியை, 'தேஷ்நாயக்' எனப்படும், தேசத் தலைவர் என, ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார். அதனால், நேதாஜியின் பிறந்த நாளை, 'தேஷ்நாயக் திவஸ்' என்ற பெயரிலேயே நாங்கள் கொண்டாடுவோம். நாட்டின் தேசிய கீதமான, 'ஜன கண மன'வை ரவீந்திரநாத் தாகூர் எழுதியுள்ளார். அதனால், தேசியகீதத்தை மாற்றுவதற்கு, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது; அதை அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


நில உரிமை தருவோம்

வட கிழக்கு மாநிலமான அசாமில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, நிலப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:அசாமைச் சேர்ந்த, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, எந்த நில உரிமையும் வழங்கப் படாமல் இருந்தது. சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு, கடந்த சில மாதங்களில் மட்டும், இரண்டு லட்சம் பேருக்கு நில உரிமை சான்றிதழை அளித்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களுடைய நில உரிமையை நிச்சயம் தருவோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X