ஆந்திராவில் தொடர்கிறது அக்கிரமம்: கோவில் சிலைகள் உடைப்பால் மக்கள் கொந்தளிப்பு | Dinamalar

ஆந்திராவில் தொடர்கிறது அக்கிரமம்: கோவில் சிலைகள் உடைப்பால் மக்கள் கொந்தளிப்பு

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (18)
Share
ஆந்திராவில் தற்போது, ஹிந்து கோவில்களை மையமாக வைத்து, அரசியல் சூறாவளி சுழன்றடிக்க துவங்கி உள்ளது. கோவில்களில், சுவாமி சிலைகள் சேதப்படுத்தும் சம்பவம், தொடர் கதையாகி வருகிறது. கோவில்களை பாதுகாக்க, ஆளும் கட்சி தவறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தான் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் மீது, மக்களின் கவனம் செல்வதை தடுக்க, எதிர்க்கட்சிகள் பின்னும் வலை
ஆந்திரா, தொடர்கிறது, அக்கிரமம் ,சிலைகள் உடைப்பு

ஆந்திராவில் தற்போது, ஹிந்து கோவில்களை மையமாக வைத்து, அரசியல் சூறாவளி சுழன்றடிக்க துவங்கி உள்ளது. கோவில்களில், சுவாமி சிலைகள் சேதப்படுத்தும் சம்பவம், தொடர் கதையாகி வருகிறது. கோவில்களை பாதுகாக்க, ஆளும் கட்சி தவறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தான் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் மீது, மக்களின் கவனம் செல்வதை தடுக்க, எதிர்க்கட்சிகள் பின்னும் வலை தான், இந்த சிலைகள் உடைப்பு என, ஆளும் கட்சியினர் கூறுகின்றனர்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்ற பின், ஹிந்து கோவில்களின் கருவறையில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள சிலைகள், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இதுவரை, 175 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக, தகவல் வௌியாகி உள்ளது.ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற பின், ஆந்திராவில் மதமாற்றங்களும், கோவில்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதில் தொடர்புடைய பாதிரியார் உட்பட, 25 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.


ராமர் சிலை சேதம்ஆந்திராவில், இதற்கு முன், அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தற்போது, கோவில் சிலை உடைப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கடந்த, 2019 நவ., 14ம் தேதி, குண்டூர் துர்கா கோவில் சிலை உடைப்பு சம்பவம் அரங்கேறியது. அதன்பின்னரே, ஆங்காங்கே கோவில்களில், சிலை உடைப்பு சம்பவங்கள், அரங்கேறி வருகின்றன.

ஆந்திராவின், விஜயநகரம் மாவட்டத்தில், ராமதீர்த்தம் பகுதியில், 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, அழகிய கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்குள்ள கோதண்டராமர் சிலையை, சில நாட்களுக்கு முன், மர்ம நபர்கள் உடைத்து, தலை, உடல் பாகத்தை, அருகில் உள்ள குளத்தில் வீசி சென்றனர். இந்த செயல், ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரவரம், பீதாபுரம் உள்ளிட்ட பழமையான கோவில்களில், விநாயகர், முருகன், அம்மன், சிவன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு மதத்தினரின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், அரங்கேற்றப்படும் சிலை உடைப்பு சம்பவங்கள், ஆந்திர ஹிந்து மக்களிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேர் எரிப்புகிழக்கு கோதாவரி மாவட்டம், அந்தர்வேதியில், லட்சுமி நரசிம்மஸ்வாமி கோவிலுக்கு சொந்தமான, 60 ஆண்டுகள் பழமையான தேர், இரவோடு இரவாக தீயிட்டு எரிக்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது, ஊரடங்கு காரணமாக, கோவில்களில், மக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, விஜயவாடா கனக துர்க்கையம்மன் கோவிலில், அம்மன் வீதியுலா வரும், வெள்ளி தேரின், மூன்று துாணில் இருந்த சிலைகளை, சிலர் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். மேலும், மேற்கு கோதாவரி, கர்ணுால், அனந்தபூர், கடப்பா, குண்டூர், விஜயவாடா, சித்துார் என, பல்வேறு இடங்களில், ஹிந்து கோவில்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, கோபுர சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீகாகுளம் மாவட்டம், டெக்கலியில் உள்ள புத்தர் சிலையின் வலது கையும், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. தற்போது, ராமதீர்த்தம் கோதண்டராமர் சிலை உடைப்பு, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.


போராட்டம்சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாநில அரசை கண்டித்தும், பா.ஜ., சார்பில், ராமதீர்த்தம் பகுதியில், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் உட்பட பலர், அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.சிலை உடைப்பு பிரச்னை பூதாகரமாகி வருவதை உணர்ந்த, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், 'சாமி சிலைகளை சேதப்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தார்.


காலணி வீச்சுஇதற்கிடையே, சந்திரபாபு நாயுடு, ராமதீர்த்தம் செல்ல, அமராவதியில் இருந்து விமானத்தில் விசாகப்பட்டினம் வருவதற்குள், ஆளும் ஒய்.எஸ்.ஆர்,. காங்கிரஸ் கட்சி எம்.பி., விஜய்சாய் ரெட்டி, தன் ஆதரவாளர்களுடன் அப்பகுதியை பார்வையிட சென்றார். இதுவரை கண்டுகொள்ளாமல், பிரச்னை பெரிதான பின், அரசு சார்பில், எம்.பி.,யை அனுப்பி வைத்ததை, ஏற்காத மக்கள், அவரது கார் மீது கற்களையும், காலணிகளையும் வீசி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


வடக்கில் தீர்வு; தெற்கில் துவக்கம்மக்களின் கோபத்தை கண்ட எம்.பி, 'இது, சந்திரபாபு நாயுடு செய்யும் சதிச் செயல். அவர் ஆட்களை வைத்து., ஹிந்து கோவில் சிலைகளை உடைத்து, பழியை ஜெகன் அரசு மீது போடுகிறார்' என, குற்றம் சாட்டினார்.பின், சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று ராமதீர்த்தத்தை பார்வையிட்டார். 'கடவுள் விவகாரத்தில் ஆடுபவனை, கடவுள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார். கண்டிப்பாக இதற்கு, ஜெகன்மோகன் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என, கூறினார்.மறுநாள், ராமதீர்த்தத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீனிவாஸ், ஆந்திர மாநில பா.ஜ., தலைவர் சோமவீரராஜு உள்ளிட்டோர், ஆய்வு செய்தனர். இதனால், ராமதீர்த்தம் பகுதி, தற்போது அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வந்து செல்லும், அரசியல் மையமாக மாறி உள்ளது.

இதுவரை, வடக்கே அயோத்தியில் மையம் கொண்டிருந்த, ராமர் கோவில் பிரச்னை தீர்க்கப்பட்ட நிலையில், ஆந்திராவில் மீண்டும், ராமர் பிரச்னை தலைதுாக்க துவங்கியுள்ளது.


கண்காணிப்பு கேமராகோவில்களில் சிலை உடைப்பு அதிகரித்து வருவதை தடுக்க, அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. போர்க்கால நடவடிக்கையாக, ஆந்திராவில் உள்ள, 58 ஆயிரத்து, 871 கோவில்களில், 43 ஆயிரத்து, 824 கோவில்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத கோவில்களில், காவல் துறையினர், இரவு வேளைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


துரித நடவடிக்கைசிலை உடைப்பு சம்பவம் பூதாகாரமாக மாறியதும், அந்த வழக்குகள் அனைத்தும், சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டன. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, 16 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.ஆந்திர டி.ஜி.பி., கவுதம் சவாங், 'கோவில்களின் அருகில் சந்தேகப்படும் வகையில், யாரேனும் நடமாடினால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, பொது மக்களுக்கு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பாதிரியார் கைதுசிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக, 23 பேரை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவை சேர்ந்த, மதபோதகரான பாதிரியார் பிரவீன் சக்ரவர்த்தியை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர், பெங்களூரை மையமாக வைத்து செயல்படும், 'காசிப்' எனும், 'யூ டியூப்' சேனலில், சில நாட்களாக சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். அதன் காரணமாக, கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீடியோக்கள், தற்போது, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகின்றன. 'Sylom Blind Centre' என்ற அமைப்பை நடத்தி வரும் பிரவீன் சக்கரவர்த்தி, வெளிநாடுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகளில், இரண்டு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து, 91.80 கோடி ரூபாய் நிதி பெற்று, மதமாற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆந்திராவில் பிற மதத்தினரை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும், கிராமத்தில் உள்ள அனைவரையுமே, மதம் மாற்றி விட்டால், அதற்கு, 'கிறிஸ்து கிராமம்' என்று பெயரிடுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை மதம் மாற்றிய பின், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில் சிலைகளை, காலால் எட்டி உதைத்து, அவர்களையும் உதைக்க சொல்வதாக, பெருமையாக பேசி உள்ளார்.
இந்த வீடியோ, 2019ம் ஆண்டே, சமூக ஊடகங்களில் பரவியது. அப்போது, Legal Rights Protection Forum என்ற, தன்னார்வ அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, பிரவீன் சக்கரவர்த்தி குறித்து புகார் அனுப்பியது.
இந்த ஆண்டு, வெளிநாட்டு நன்கொடையாளரிடம், பிரவீன் பேசும் வீடியோ ஒன்றை, Legal Rights Protection Forum வெளியிட்டது. அதில், தன்னுடன், 3,642 மத போதகர்கள், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இது வரை, 699 கிறிஸ்து கிராமங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, குண்டூரை சேர்ந்த சிங்கம் லக்ஷ்மி நாராயணா அளித்த புகாரில், சி.ஐ.டி., போலீசார், பிரவீனை கைது செய்துள்ளனர். இவர் மீது, மதக் கலவரம் ஏற்படுத்த முயன்றதாக, ஆறு பிரிவுகளில், சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதிய சிலைகள்ராமதீர்த்தம் கோவிலில் உடைக்கப்பட்ட, சீதா, ராமர் சிலைக்கு பதிலாக, புதிய சிலைகள், திருப்பதியில் உள்ள சிற்ப கலை மையத்தில் செதுக்கப்பட்டு, நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் இருந்து வந்த கிருஷ்ணா ஸ்தபதி தலைமையில், 15 சிற்பிகள், 15 நாட்களில் முடிக்க வேண்டிய பணியை, 10 நாட்களில் நிறைவு செய்து, சிலைகளை உருவாக்கி உள்ளனர். 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள், சிறப்பு பூஜைகளுக்கு பின், ராமதீர்த்தத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சோழர், பல்லவர்கள் காலத்திய சிலை வடிப்பின் படி, இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

'தற்போது, கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், அவை நிறைவு பெறும் வரை, சிலைகள் மலையடிவாரத்தில் வைத்து பாதுகாக்கப்படும். செப்பணிடும் பணிகள் நிறைவடைந்ததும், கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்' என, ஆந்திர அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், அந்தர்வேதியில் எரிக்கப்பட்ட தேருக்கு பதிலாக, 5 கோடி ரூபாயில், புதிய தேர் தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம், கோவிலில் நடக்க உள்ள, கல்யாண உற்சவத்தின்போது, உற்சவமூர்த்திகள், புதிய தேரில் புறப்பாடு கண்டருள உள்ளனர்.


தர்கா எரிப்புஹிந்து கோவில்களில், தாக்குதல்கள் நடத்தப்பட்டதுபோல், கடந்த வாரம், சித்துார் மாவட்டம், பலமநேரில் உள்ள ஒரு தர்காவில், விஷமிகள் சிலர், அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து, அழித்ததுடன், அங்கிருந்த போர்வைகளுக்கு தீ வைத்து சென்றனர். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஜெகன் ஆட்சி சம்பவங்கள்ஆந்திர முதல்வராக, ஜெகன்மோகன் பொறுப்பேற்றதும், திருமலையில் அளிக்கப்பட்டு வந்த, பஸ் கட்டண சீட்டில், ஜெருசலேம் யாத்திரை குறித்த விளம்பரம் இடம்பெற்றது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பக்தர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, ஜெருசலேம் யாத்திரை குறித்த டிக்கெட்டுகளை, தேவஸ்தானம் திரும்ப பெற்றது. அதன்பின், திருமலையில் சிலுவை குறி உள்ளதாக, சர்ச்சை எழுப்பப்பட்டது. இதில் தொடர்புடையவரை, காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பிரம்மோற்சவத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அலங்காரத்தில், சிலுவை வடிவம் இருப்பதாக, சமூக வளைதளங்களில், தகவல் பரப்பப்பட்டது.


தண்டனை அவசியம்சிலை உடைப்பு குறித்து, ஹைந்தவ பிரசார சங்க பிரதிநிதி கேசவாச்சார்யலு கூறியதாவது:
தற்போது ஆந்திராவில், கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற, நிலை உள்ளது. இதற்கு, அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை, ஆந்திராவில் நடந்த கோவில் தாக்குதல் மற்றும் சிலை உடைப்பில் கைதானவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. அவர்கள் மீது, வழக்குபதிவு செய்யப்படுகிறது. அவர்களும் ஜாமின் பெற்று, வெளியில் வந்து விடுகின்றனர். வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால், தவறுகள் நடப்பது கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


வழக்குகள் விபரம்ஆந்திராவில் கோவில்களின் மீது தாக்குதல் நடத்தி, சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக, 2015ல், 290; 2016ல், 332; 2017ல், 317; 2018ல், 267; 2019ல், 305; 2020ல், 228 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், சிலை உடைப்பு தொடர்பாக, 8,250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திராவா; பாகிஸ்தானா?ஆந்திராவில், ஹிந்து கோவில்கள் சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து, ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கூறியதாவது:
ஆந்திரா தற்போது, பாகிஸ்தானாக மாறிவிட்டதா என, எண்ணத் தோன்றுகிறது. ஆந்திராவில், பல ஹிந்து கோவில்கள், சிலைகள், தேர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல், பாகிஸ்தானில் நடந்து வருவதாக கேள்விப்பட்டுள்ளோம்.இப்போது, ஆந்திராவில் காண நேர்ந்துள்ளது. நாம் ஆந்திராவில் இருக்கிறோமா; பாகிஸ்தானில் இருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


மண்ணுக்கு அவமானம்தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிறிஸ்துவராக இருந்தாலும், அவர், தன் அதிகார பலத்தை உபயோகித்து, ஹிந்து மக்களை, அவரது மதத்திற்கு மாற்ற நினைப்பது தவறு. ஹிந்து மக்களிடையே, ஒருவித பயத்தை உண்டாக்கி, அதன் வழியே, அவர்களை மதமாற்றம் செய்து விடலாம் என, நினைப்பது தவறு.

ஆட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், மத மாற்றத்தை ஊக்குவிப்பதோ அல்லது உருவாக்க நினைப்பதோ, மிகவும் தவறு. இது, மிகப்பெரிய துரோகம். கோதண்டராமர் சிலையின் தலையை வெட்டி, குளத்தில் வீசிய சம்பவம், இந்த மண்ணுக்கு மிகப்பெரிய அவமானம். ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த, 18 மாதங்களில், 127 ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


அரசியல் வேண்டாம்முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க, தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து, கோவிலில் தாக்குதலில் ஈடுபடுவதாக, ஜெகன்மோகன் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 'சிலை உடைப்பை வைத்து, அரசியல் செய்ய வேண்டாம். இது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும்படி உள்ளது' என, ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


மக்களின் மனோபாவம்
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடு. ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய முயன்றாலும், அதை அழிக்க நினைத்தாலும், ஹிந்து மதம் என்றும், தன் பெருமையை இழக்காது. வெளிநாடுகளில் வாழும், பல வேற்று மதத்தினர், ஹிந்து மதத்தின் பெருமையை உணர்ந்து, அதை தழுவி வருகின்றனர்.
நாட்டில் எத்தனை மதங்கள் தோன்றினாலும், எத்தனை ஆயிரம் பேர், அதை அழிக்க திரண்டு வந்தாலும், ஹிந்து மதத்தை வேரறுக்க யாராலும் முடியாது. தனித்து தழைத்தோங்கும் சக்தி, அதற்கு உண்டு.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X