விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அம்பேத்கர் போர்டு அகற்றியதை கண்டித்து வி.சி., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பஸ் நிறுத்தம் அருகில், அண்ணாமலை,66; என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.இவரது கடை எதிரில் வி.சி., கட்சியினர் அம்பேத்கர் படம் வரைந்த போர்டு வைத்திருந்தனர்.வியாபாரத்திற்கு இடையூறாக இருந்ததால், போர்டை அகற்ற வேண்டி அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்திரவின் பேரில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் போர்டு அகற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று காலை 9.30 மணியளவில் ராதாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி.,க்கள் நல்லசிவம் , ரவீந்திரன் ஆகியோர், மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன், கிளை செயலாளர் தனசேகர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, போர்டை எதிர் திசையில் வைக்க தாசில்தார் மூலம் இடத்தை அளவு செய்து தருவதாக உறுதியளித்தனர். அதனையேற்று காலை 11:30 மணிக்கு மறியலை கைவிட்ட கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE