வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதம், செனட் சபையில், அடுத்த மாதம், 8ல் துவங்குகிறது.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தார். ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்வதற்காக, அமெரிக்க பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம், சமீபத்தில் நடந்தது.
![]()
|
அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள், பார்லிமென்ட் வளாகத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் இறந்தனர்; இது, அமெரிக்க பார்லிமென்ட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபையில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம், 223 எம்.பி.,க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இது குறித்து, செனட் சபை பெரும்பான்மை தலைவர் சக் ஹூமர் கூறியதாவது:-
டிரம்புக்கு எதிரான தீர்மானம், செனட் சபையில் நாளை தாக்கல் செய்யப்படும். அந்த தீர்மானம் தொடர்பாக, பிப்., 8ல், விவாதம் துவங்கும்.
இதன்பின், தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும். டிரம்பின் பதவிக் காலம் ஏற்கனவே முடிவடைந்து, புதிய அதிபர் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தகுதி நீக்க தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால், அதனால் எந்த பயனும் இல்லை எனக் கூறி விட முடியாது.
தீர்மானம் நிறைவேறினால், அதிபர் தேர்தலில், டிரம்பால் இனி போட்டியிட முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE