சென்னை:ஆண் காவலரும், பெண் காவலரும், ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற காரணத்திற்காக, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல' என, காவலரின் பணி நீக்கத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 1997ல், தமிழக போலீஸ் ஆயுதப்படை பிரிவில், கான்ஸ்டபிளாக சரவணபாபு பணியில் சேர்ந்தார். போலீஸ் குடியிருப்பில், பணி வரைமுறைகளை மீறி, சக பெண் போலீசுடன், தவறான கண்ணோட்டத்தோடு இருந்ததாக, ஆயுதப்பிரிவு ஐ.ஜி., அவரை பணி நீக்கம்செய்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து சரவணபாபு தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமார் விசாரணை செய்தார். '
தோழியை பார்க்க வந்த பெண் போலீஸ், அவர் இல்லாததால், பக்கத்து வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு சென்றாரா என கேட்பதற்காக, சரவணபாபு வீட்டிற்குள் வந்தார். அந்த நேரத்தில், வெளியில் யாரோ கதவை பூட்டிச் சென்றனர். அதிகாரிகள் வந்தபோது, மனுதாரர் நடந்ததை கூறியும், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணைக்குப் பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சமர்ப்பிக்கும் கருத்தையே, போலீஸ்துறை சாட்சிகளும் தெரிவித்தித்துள்ளன. சம்பந்தப்பட்ட பெண் போலீசும், போலீஸ் சரவணபாபுவும், தவறான நோக்கோடுதான் வீட்டிற்குள் இருந்தனர் என்பதற்கு, சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லை.ஆண் போலீசும், பெண் போலீசும், குறிப்பிட்ட நேரம் ஒரே வீட்டில் இருந்தனர் என்பதற்காக, அவர்கள் தவறான நோக்கம் கொண்டிருந்தனர் என்ற கருத்தை ஏற்க முடியாது.எனவே, சரவணபாபுவை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் பணி பலன்கள் பெற தகுதியானவர்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE