பெங்களூரு:இன்று நடக்கவிருந்த முதல் நிலை அரசு ஊழியர்களுக்கான தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. கசிவுக்குக் காரணமான ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 24 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக பொது தேர்வு ஆணையம் எனும் கே.பி.எஸ்.சி., சார்பில் அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவர். அந்த வகையில், 2009ம் ஆண்டுக்கான எப்.டி.ஏ., எனும் முதல் நிலை அரசு ஊழியர்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வுக்கு, மாநிலம் முழுவதிலிருந்தும், 3 லட்சத்து, 74 ஆயிரத்து, 124 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
2 லட்சத்து, 82 ஆயிரத்து, 909 பேர் தங்கள் நுழைவு சான்றிதழ், ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.கட்டாய கன்னட தேர்வு நேற்று நடந்தது. இன்று காலை, 10:00 முதல், 11:30 மணி வரை, பொது அறிவு தேர்வும்; மதியம், 2:00 முதல், 3:30 மணி வரை, கன்னட தேர்வும் நடக்கவிருந்தன.இந்நிலையில், வினாத்தாள் வெளியானதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சி.சி.பி., அதிகாரிகள், வினாத்தாள் கசிந்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அதிரடி விசாரணையில், வினாத்தாள் கசிவு செய்த, ராச்சப்பா, 32, சந்துரு, 32, ஆகிய இருவரை கைது செய்தனர்.வினாத்தாள் கசிவு செய்ய உதவிய மேலும் நால்வர், நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து, 24 லட்சம் ரூபாய் ரொக்கம், வினாத்தாள் கொண்டு செல்ல பயன்படுத்திய மூன்று வாகனங்கள், வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து, இன்று நடக்கவிருந்த எப்.டி.ஏ., தேர்வு, அதிரடியாக ஒத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து, கே.பி.எஸ்.சி., செயலர் சத்தியவதி வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தின் வெவ்வேறு துறைகளில் காலியாக இருந்த முதல் நிலை ஊழியர்களுக்கான தேர்வு, இரண்டு கட்டமாக, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்தது.இதற்கிடையில், 23ல், வினாத்தாள் கசிவான தகவல் வெளியானது. இதனால், இன்று நடக்கவிருந்த முதல் நிலை ஊழியர்களுக்கான தேர்வு, கட்டாயத்தின் அடிப்படையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு, எப்போது நடத்தப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சி.சி.பி., இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:வினாத்தாள் கசிவு தொடர்பாக, எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஆறு பேரை கைது செய்தோம்.
எப்படி வினாத்தாள் கசிந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், இன்று தேர்வு எழுத பல மாதங்களாக தயாராகி வந்தவர்கள், கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE