புதுடில்லி:இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை நாளை அறிமுகப்படுத்துகிறது.

வாக்காளர்களுக்கு, தற்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இனி, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாளை இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் முறையாக ஓட்டளிப்பதற்காக, மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், வரும், 25 - 31 வரை, 'இ - இபிக்' எனப்படும், மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதில், புகைப்படம், வரிசை எண், பகுதி எண் உள்ளிட்ட விபரங்களுடன், பாதுகாப்பான, 'க்யூஆர் கோடு' வசதி இருக்கும்.
இதை, வலைதளம் மூலம் மொபைல் போன் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர்கள் அளிக்கும் மொபைல் போன் எண், இதற்கு முன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. இரண்டாம் கட்டமாக, பிப்.,1 முதல், அனைத்து வாக்காளர்களுக்கும், 'இ - இபிக்' பதிவிறக்கிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதம், அடையாள அட்டை காணாமல் போவது, சேதமடைவது போன்ற பிரச்னைகளை, இதன் மூலம் தவிர்க்கலாம். வழக்கமான, வாக்காளர் அடையாள அட்டை வினியோகமும், தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE