டில்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ப.சிதம்பரத்துக்கும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிப்பது, செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், சோனியாவுக்கு சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதினர்; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வார்த்தை மோதல்
இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில், இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசும் போது, சோனியாவுக்கு கடிதம் எழுதிய தலைவர்களை நேரடியாக கடுமையாக சாடினார்;
அவர் பேசியதாவது: கடந்த, 10 ஆண்டுகளாக, செயற்குழு கூட்டம், எந்தவித தேர்தலும், சண்டையும் இல்லாமல் நடந்தது. ஆனால், திடீரென தேர்தல் நடத்தும்படி ஒரு தரப்பினர் கூறி, தங்களை பெரிய ஆட்களாக காட்ட முயற்சிக்கின்றனர். தலைமை மீது குறை சொல்வதையும், விமர்சிப்பதையும், நாம் தவிர்க்க வேண்டும். சில தலைவர்கள், அடிமட்டத்திலிருந்து வளராமல், நேரடியாக பெரிய பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.
கெலாட்டின் இந்த பேச்சுக்கு, சோனியா ஆதரவாளர்களான, அம்பிகா சோனி உட்பட சிலர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனந்த் சர்மாவும், கெலாட்டும் நேரடி வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்; தகாத வார்த்தைகளை கூறி, இருவரும் ஆபாசமாக திட்டினர்.இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின், 'செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட வேண்டும்' என, குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா என, பலரும் வலியுறுத்தினர். அசோக் கெலாட், அந்தோணி, அம்பிகா சோனி உள்ளிட்டோர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ப.சிதம்பரம், அசோக் கெலாட்டுடன் நேரடியாக மோதினார்.
அப்போது, 'உங்களுக்கு கட்சியை விட்டால், வெளியில் என்ன மதிப்பும், மரியாதையும் உள்ளது' என, அசோக் கெலாட் காட்டமாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்த முடிவு
இதன்பின், ஆனந்த் சர்மா பேசியதாவது: செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்கள், இந்திரா காலத்திலிருந்தே கட்சியில் இருப்பவர்கள்; அவர்கள், காங்கிரஸ் தலைவர்களாக பார்க்கப்படுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களை, சக உறுப்பினர், ஒருமையில், தகாத வார்த்தைகளில் பேசுவது சரியில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.
இதையடுத்து தலையிட்ட ராகுல், 'யாரும் கடும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. கட்சிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு விட்டது; அதை நோக்கி நகர்வோம்' என்றார். இதையடுத்து, கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE