கரூர் : காங்., கட்சியில், கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செந்தில் பாலாஜி இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவலால், தி.மு.க.,-காங்., கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தி.மு.க.,வில் இணைந்த இரண்டு ஆண்டுகளில், கரூர் மாவட்ட பொறுப்பாளர், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., என்று அடுத்தடுத்த பொறுப்புகளை செந்தில் பாலாஜி பெற்றுள்ளார். தி.மு.க., தலைமையுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். இதை பயன்படுத்தி, தன் ஆதரவாளர்களை தொடந்து நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.இவரின் குறுகிய கால வளர்ச்சி முன்னாள் அமைச்சர்கள் நேரு, வேலு, பெரியசாமி உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என, கூறப்படுகிறது.
பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறார், முன்னாள் கரூர் எம்.பி.,பழனிசாமி; அவரை கைதுாக்கி விட, அவரது மகன் சிவராமனுக்கு, அரவக்குறிச்சியில், 'சீட்' வழங்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கரூர் தொகுதியில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருடன், தான் மோதும் போது, முடிவு பாதகமாக அமைத்து விட்டால், அரசியல்வாழ்வில் சிக்கல் ஏற்படும்.எனவே, மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட செந்தில்பாலாஜி வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால், தலைமை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த, தி.மு.க., மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதை தொடர்ந்தே, வாட்ஸ் ஆப்பில், செந்தில்பாலாஜி கட்சி மாறுகிறார் என்ற தகவல் உலா வருகிறது.அதில், 'கரூர் மாவட்ட, தி.மு.க., கோஷ்டிப்பூசலால் ஓரங்கட்டப்பட்ட செந்தில் பாலாஜி, தி.மு.க.,விலிருந்து வெளியேறி, கரூர், காங்.,- எம்.பி. ஜோதிமணி ஆதரவுடன், காங்கிரஸில் இணையவுள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, காங்., முன்னாள் தலைவர் ராகுல் வந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிலையில், தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,வை, காங்.,கட்சியில் சேர்த்தால், கூட்டணியில் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படும் என, காங்.,தலைமைக்கு தெரியும் என்பதால், அவர், காங்கிரசில் இணைய வாய்ப்பு குறைவு. அதனால், கரூருக்கு ராகுல் வரும் நேரத்தில், அ.தி.மு.க.,வினர் தேவையில்லாமல் வதந்தியைபரப்புகின்றனர் என, தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது, ''இந்த வாட்ஸ் ஆப் செய்தியை, யார் பரப்புகின்றனர் என்று சொன்னால், பதில் அளிக்கிறேன்,'' என்றார்.கரூர் எம்.பி., ஜோதிமணி கூறுகையில், ''பிழைப்பு இல்லாதவர்கள் தகவலை பரப்பி வருகின்றனர்,'' என்றார்.சமூக வலைதளங்களில் செந்தில்பாலாஜி பற்றி பரவி வரும் தகவல், காங்.,- தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE