சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.
01. வானமழை நீ எனக்கு
ஆசிரியர்: வரலொட்டி ரெங்கசாமி
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர், மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 212 விலை: ரூ.230
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா... நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா... என்பது போல காணும் அழகெல்லாம் பச்சை புடவைக்காரியின் அழகாய் எழுத்தாளருக்கு தோன்றுகிறது. பெண்ணின் அழகில் மயங்குவது மனித இயல்பு. அதை ஆன்மிக இயல்பாய் மாற்றும் பக்குவம் தெரிந்திருக்கிறது. அழகென்பது ஆளைக் கவர்ந்திழுக்கும் சிறு அடையாளம் தான். அதைத் தாண்டிய திறமையைப் பார்க்கும் போது அழகு மறைந்துவிடும். ஆராதிக்க தோன்றும்.
ரஞ்சனியின் கண்களைப் பார்த்து கன்னக்குழிகளை ரசிக்க நினைத்த எழுத்தாளர், தன்னைத் தொட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என நினைத்தது சுமாரான மால்யாவிடம் தான். ஒருவரின் திறமை தான் நிரந்தர முகவரி என்பதை மால்யாவுக்கு உணர்த்துவது போல, நமக்கும் உணர்த்துகிறார்.
எவ்வளவு பெரிய எழுத்தாளரையும் நிற்கவைத்து, எழுத்தை கூர் கூராக ஆராய்ந்து விவாதம் செய்யும் போது வியர்த்து விடும். இங்கும் அப்படித்தான் ரஞ்சனியின் பெயரில் அன்னை பராசக்தி அவரை தட்டி எடுத்து பொன்னென வார்த்தைகளை எழுதத் துாண்டி ஜொலிக்க வைக்கிறார். சட்டென பார்க்கத் துாண்டும் அழகைப் போன்ற அடையாளம் தான் இயல்பான ஆடிட்டர் ஸ்ரீதரிடம் இருந்தது.
இதயத்தைப் புரட்டி எழுத்துக்களை வார்த்து எடுத்து படிக்க கொடுப்பது என்பது கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்த வரலொட்டி ரெங்கசாமியின் அடையாளம். அதனால் உருவாகிய வாசகர்கள் வட்டமே அவரை மேலும் புடம் போட்டு எழுத்துக்களால் மின்ன வைக்கிறது.
காட்டாற்று வெள்ளம் கண்ணில் கண்டதை எல்லாம் அடித்து புரட்டி களைத்து சோர்ந்து கடலில் நிதானமாக கலப்பது போல கதையோட்டம் அமைந்துள்ளது. அழகில் மயங்கி அறிவில் திளைத்து ஆன்மாவில் ஒன்றும் இரு உள்ளங்களின் உணர்வுகளை பற்றிய கதை... படைத்தவரைப் போலவே படிப்பவருக்கும் மனம் கனக்கும்.
- எம்.எம்.ஜெ.,
02. இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது?
ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்
வெளியீடு: அருணா பதிப்பகம்
வில்லிவாக்கம், சென்னை - 49.
அலைபேசி: 94440 47790
பக்கம்: 176 விலை: ரூ.70

இந்தியாவுக்கு, கி.மு., 500 முதல் கி.பி., 1300 வரை வந்த, ஆறு வெளிநாட்டு பயணியர் எழுதிய குறிப்பு தான் இந்நுால். அப்போதைய மக்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் நிர்வாகம், வியாபாரம், சமயம், கலாசாரம், பண்பாடு போன்ற அம்சங்களை விளக்குகிறது.
நுாலில் இருந்து...குற்றவாளிகளை, யானையை வைத்து கொல்லும் வழக்கம் இருந்தது. பயிற்சி கொடுத்த யானையின் துதிக்கை மற்றும் தந்தத்தில் விதவிதமான கொலை கருவிகள் இணைக்கப்படும்.
குற்றவாளியை துாக்கி சுழற்றி எறிந்து, உடல் கீழே வரும்போது, தந்தத்தில் பொருத்திய ஈட்டி முனையில் தாங்கி கொல்லும். காலால் மண்ணில் மிதித்து புதைக்கும். சதிக்குற்றம் சாட்டப்பட்ட, 62 அமீர்கள் ஒரே நேரத்தில் யானையால் கொல்லப்பட்டனர்.
இப்படி, அப்போதைய இந்தியா குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
- டி.எஸ்.ராயன்
03. சேது காப்பியம் 11
ஆசிரியர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
வெளியீடு: கவிஅரசன் பதிப்பகம்
சென்னை - 92.
அலைபேசி: 72997 67525
பக்கம்: 480 விலை: ரூ.700

கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்று கன்னித் தமிழ்த் தொண்டும், கவிதைத் தொண்டும் செய்துள்ளார். நுாலில் ஆசிரியரின் சுயசரிதை உள்ளது. இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன், அருள்மொழி என்னும் பாத்திரத்தில் வலம் வருகிறார். அவரது பயணங்கள், பயணங்களில் நிகழ்ந்த இன்ப, துன்பங்கள் தெரிகின்றன. அயல் நாட்டின் அழகை எடுத்து இயம்புகிறார்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்கள் போன்ற பல்வேறு கண்டங்களையும், நகர்களையும் கவித்திறனால் படம் பிடித்துக் காட்டுகிறார். தமிழின் சிறப்பை கவிதையில் போற்றுகிறார். முதல் கவிதையாகப் பதிப்பு பாயிரம் துவங்கி, 62 தலைப்புகளில் நிறைவான கவிதைகளைக் கொண்டு நிறைவு அடைகிறது. உலகம் என்று துவங்கி, உலக அமைதி என்று முடித்திருப்பது சிறப்பு. அயல்நாட்டில் நிலவும் வாழ்க்கைச் சூழலை அறிய முடிகிறது. மரபுக் கவிதை எழுத இந்த நுால் பெரிதும் உதவும்.
- பேராசிரியர் இரா.நாராயணன்
04. தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் - பாகம் 5
ஆசிரியர்: தமிழ்வாணன்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
7, தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 536 விலை: ரூ.440

எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக கொடிகட்டிப் பறந்தவர். மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் என்று ஆர்வத்தைத் துாண்டும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர்.
சங்கர்லால் என்னும் துப்பறியும் பாத்திரத்தை உருவாக்கிப் பல நாவல்களைப் படைத்தவர், சொந்தப் பெயரிலேயே, 'தமிழ்வாணன் துப்பறிகிறார்' என்றும் படைத்துள்ளார். பெர்லின், டோக்கியோ, சிகாகோ முதலான அயல்நாட்டு நகரங்களின் பெயர்களை, தமிழகத்தில் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அறிமுகம் செய்தவர் தமிழ்வாணன்.
'கருநாகம், நடுநிசிநேரம், இரண்டாவது நிலா, என்னைத் தொடாதே, கான்ஸ்டபிள் கண்ணம்மா' என்னும் ஐந்து மர்ம நாவல்களின் தொகுப்பாக வந்துள்ளது. நிஜமாக நடந்ததுபோல் எழுதும் இயல்பு கொண்ட தமிழ்வாணன், அந்த உண்மைக்குக் கூடுதல் சாட்சியாக நிஜ ஊர்ப் பெயர்களையே பயன்படுத்தியுள்ளார். எல்லா நாவல்களிலும் கதை நிகழிடத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் தெள்ளத் தெளிவாகப் படைப்பதில் கை தேர்ந்தவர் என்பதை எடுத்துரைக்கின்றன. பயண நேரத்தைப் பயனுள்ள பொழுதாகக் கழிக்க விரும்பும் ஒவ்வொருவரும் பையில் எடுத்துச் சென்று படிக்க வேண்டிய மர்ம நாவல் தொகுப்பு.
- முகிலை ராசபாண்டியன்
05. மீண்டும் ஒரு சூரியோதயம்
ஆசிரியர்: டி.பத்மநாபன்
வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்
23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2433 2682
பக்கம்: 186 விலை: ரூ.180

விக்கிரமாதித்தன் என்று அடையாளம் காணப்பட்ட, இரண்டாம் சந்திரகுப்தரின் வாழ்வை அழகியல் உணர்வுகளோடு வரலாற்று நாவலாக வடித்துள்ளார். சிறப்பாக வருணித்துச் செல்கிறார். சந்திரகுப்தர், ஆட்சி அரியணை ஏறுவதற்குள் ஏற்பட்ட அவமானங்கள், எதிர்ப்புகள், சோதனைகள் யாவற்றையும் சுவைபட விவரிக்கும் ஆசிரியர், நாவலை விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடத்திச் செல்கிறார். இந்திய வரலாற்றில் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்பதையும் நிறுவுகிறார்.
வெற்றி எனக்குத் தான், பல்லக்கு விஜயம் போன்ற உட்தலைப்புகளால் வாசகருக்கும், படைப்புக்குமான நெருக்கத்தை அதிகரிக்கிறார். மகத மண்ணில் மீண்டுமொரு சூரியோதயம் தோன்றிவிட்டதை படைப்புத் திறனால் நிறுவிச் செல்லும் படைப்பு இது.
- ராமலிங்கம்
06. திருப்புகழ்த் திருத்தலங்கள்
ஆசிரியர்: ஆ.கோமதி நாயகம்
வெளியீடு: அழகு பதிப்பகம்
சென்னை - 49.
தொலைபேசி: 044 - 2650 2086
பக்கம்: 356 விலை: ரூ.350

மறுபதிப்பாக வந்துள்ளது. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் பாடிய, 201 தலங்களைப் பற்றியும், வைப்புத் தலங்கள், முருகன் தலங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் வரலாற்றோடு மாவட்டங்கள் தோறும் இத்தலங்கள் அமைந்துள்ள விபரமும் அடங்கி இருக்கிறது. முருகனுக்கு உரிய மந்திரங்கள், யந்திரங்கள், விரதங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
- பின்னலுாரன்
07. வள்ளுவர் அடிச்சுவட்டில்
ஆசிரியர்: நெல்லை சு.முத்து
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2810
பக்கம்: 168 விலை: ரூ.130
தமிழ் அறிஞர்களுக்கு இணையாக, அறிவியல் அறிஞர்களும் திருக்குறள் குறித்து எழுதுவர் என்பதை இந்நுால் வாயிலாக அறிந்து கொள்ளலாம். எளிய தமிழில், 12 தலைப்புகளில் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
இளம் வயதில் இலங்கை வானொலியில் திருக்குறள் குறித்த படைப்புகள் வந்தது பற்றியும் கூறியுள்ளார். திருக்குறள் பதிப்புகளின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. திருக்குறளில் அறிவியல் கூறுகள் என்ற கட்டுரை சிறப்பானது.
- டாக்டர் கலியன் சம்பத்து
08. கண்ணே மணியே முத்தந்தா
ஆசிரியர்: டாக்டர் மரியா மாண்டிசோரி
வெளியீடு: கலாஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
கோவிலுார் மடாலயம், சென்னை - 33.
தொலைபேசி: 044 - 2474 3081
பக்கம்: 128 விலை: ரூ.75

குழந்தைகளுக்கு கற்பித்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்டுள்ள நுால். பயிற்றுவிப்பதில் உலக அளவில் மாற்றம் ஏற்படுத்திய மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கியது பற்றி, 21 கட்டுரைகளில் கூறியுள்ளார்.
இந்த முறை பிறந்த வரலாறு அனுபவமாக விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கற்பதற்கான சூழலை உருவாக்குவதே ஆசிரியரின் வேலை என தெளிவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ச்சியும், அதனுாடே இயல்பான கற்கை நெறியும் வெளிப்பட்டுள்ளது. கற்பிக்கும் நுட்பம் மிளிர்ந்துள்ளது. கற்பிப்பதில் மாற்றம் காண விரும்புவோருக்கு உதவும் நுால்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE