வானவில் வண்ணங்களில் நுாலெடுத்து நெய்த சிலை... பிரம்மன் படைப்பில் பூமிக்கு புரியாத புதிராக வந்த கலை... இவள் ஆடை வடிவமைக்க மயிலும் தோகை விரிக்குமே, இதழ்களை தொட்டு தீண்டிட பூக்களும் இதழ்கள் உதிர்க்குமே, பொன்னிற தேகம் தாங்கிய ஆடைகளும் ஆனந்தம் பாடுமே, இவள் எங்கே என்று தேவலோகமும் தேடுமே... என வர்ணிக்க வைக்கும் மதுரை பேஷன் டிசைனர், மாடல் பிரத்திமா பிரியமுடன் மனம் திறக்கிறார்...
பிரத்திமா... உங்களை பற்றி சிறிய அறிமுகம்... ?
நான் மதுரைக்கார பொண்ணு...' அசத்த போவது யாரு' காமெடி 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று பல படங்களில் நடித்த வெங்கடேஷ் என் அப்பா. சென்னையில் பிஎஸ்.சி., பேஷன் டிசைனிங் படிச்சிட்டு சினிமா காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறேன்.
பேஷன் டிசைனிங், சினிமா மேல் எப்படி என்ன தான் ஆர்வம் ?
இன்றைய இளம் பெண்கள் விதவிதமாக டிரஸிங் பண்ணிக்குறாங்க. நானும் அப்படி தான்... இதையே படிப்பா படிச்சிட்டு வேலையாகவும் மாற்றிடலாம்ங்குற ஆர்வத்தில் தான் வந்தேன். மதுரைக்கு புதிய பேஷன் டிரஸ்களை அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.
சமீபத்தில் நீங்கள் காஸ்ட்யூமராக பணியாற்றிய வெற்றி படங்கள் ?
'விஸ்வாசம்', 'சைக்கோ', 'குதிரைவால்' படங்களில் உதவி காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். இந்த படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அணிந்த காஸ்ட்யூம்கள் டிரண்ட்டிங் ஆனது.
உதவி காஸ்ட்யூம் டிசைனராக சினிமா மட்டும் தானா சீரியல்... ?
'விஸ்வாசம்' காஸ்ட்யூம் டிசைனர் தக்சா உடன் இணைந்து 'சந்திரகுமாரி' உள்ளிட்ட சீரியல்கள், 100 விளம்பர படங்களுக்கு காஸ்ட்யூம் பண்ணியிருக்கேன். தனியாக 6 விளம்பர படங்கள், வெப் சீரிஸ்க்கு டிசைனிங் பண்ணியிருக்கேன்.
காஸ்ட்யூம்களால் உங்களை கவர்ந்த சினிமா
'சைரா' படத்தில் காஸ்ட்யூம் பிடிக்கும்... 'மாபியா' படத்தில் நடிகர் பிரசன்னா காஸ்ட்யூம் பிடிச்சது. இந்த மாதிரி படங்களில் டிசைன் பார்த்து கற்றுக் கொள்கிறேன்.
நெக்ஸ்ட் மாடலிங், நடிப்பு... குடும்பத்தில் சப்போர்ட் இருக்கா?
இப்போ கொஞ்சம் மாடலிங் பண்ணிட்டு இருக்கேன்... நெகட்டிவ் கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயார். அப்பா மாதிரியே அம்மா பானுமதியும் சப்போர்ட் பண்றாங்க. 'நீயா நடிக்க வாய்ப்பு தேடி போகாமல், உன்னை தேடி வாய்ப்பு வர மாதிரி சாதிக்கனும்னு சொல்லிருக்காங்க...
மெயின் காஸ்ட்யூம் டிசைனராக எப்போ, பிடித்த டிசைனிங்?
இரண்டு படங்களில் மெயின் காஸ்ட்யூம் டிசைனராக 'கமிட்' ஆகியிருக்கேன். கொரோனா சூழ்நிலை மாறியதும் அந்த பட வேலைகள் ஆரம்பிக்கும். பாரம்பரிய ஆடை டிசைனிங் பிடிக்கும்.
இன்ஸ்டாகிராம் முகவரி: prathima_venkat_28
ஸ்ரீனி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE