குடும்ப அரசியல் குற்றமே: எஸ்.வி.சேகர் | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

குடும்ப அரசியல் குற்றமே: எஸ்.வி.சேகர்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (5)
Share
'ரேடியோ'வில் துவங்கி, இன்றைய அரசியல் வரை பரபரப்பாகவே பேசப்படுபவர், நடிகர் எஸ்.வி.சேகர், 70. இவரைப் பற்றிய தகவல்கள் பல இருந்தாலும், அதிகம் அறியப்படாத வியப்பூட்டும் பல விஷயங்கள் அவருள் புதைந்துள்ளன. அவரது மனம் திறந்த பேட்டி:உங்களின் முதல் பயணம் எப்படி இருந்தது?என் கலையுலக பாதை, ரேடியோ நாடகத்தில் தான் துவங்கியது. என், 7 வயதில், 'வேப்பம்பூ பச்சடி' என்ற சிறுவர்
குடும்ப அரசியல், எஸ்.வி.சேகர்

'ரேடியோ'வில் துவங்கி, இன்றைய அரசியல் வரை பரபரப்பாகவே பேசப்படுபவர், நடிகர் எஸ்.வி.சேகர், 70. இவரைப் பற்றிய தகவல்கள் பல இருந்தாலும், அதிகம் அறியப்படாத வியப்பூட்டும் பல விஷயங்கள் அவருள் புதைந்துள்ளன. அவரது மனம் திறந்த பேட்டி:


உங்களின் முதல் பயணம் எப்படி இருந்தது?

என் கலையுலக பாதை, ரேடியோ நாடகத்தில் தான் துவங்கியது. என், 7 வயதில், 'வேப்பம்பூ பச்சடி' என்ற சிறுவர் நாடகத்தில், கூத்தபிரான் ரேடியோ அண்ணாவால் அறிமுகமானேன். முதல் என்ற பல விஷயங்கள், எனக்கு சொந்தமானதே. முதல் ரேடியோ வர்த்தக விளம்பரம், 'லிப்டன் ரூபி தி சிட்டி' என்ற, என் விளம்பரம் தான்.துார்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் ஐந்து வார தொடர், 'காட்டுல மழை' என்ற மேடை நாடகமே. அதேபோல், முதல் 13 வார தொடர், வண்ணக் கோலங்கள். முதல்முதலாக நாடகத்திற்கு, 'ஆடியோ கேசட்' போட்டதும் நான் தான். இலங்கை வானொலிக்காக, 275 ஒலிச்சித்திரம் செய்துள்ளேன். அமெரிக்கா, குவைத் போன்ற நாடுகளில், 1992ல் என் பாத்திரத்தில் நானும், மற்ற பாத்திரங்களில் அங்குள்ள கலைஞர்களும் நடித்து, நாடக அரங்கேற்றம் செய்ததும் புதுமையே.


நீங்கள் பெருமைப்படும் விஷயங்கள்?

கலைத்துறையில், 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன். இதுவரை ஒரு சொட்டு மது குடித்ததில்லை; புகை பழக்கம் இல்லை. எங்கு இருந்தாலும், ஒழுக்கம் முக்கியம். நான் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்த போதும் 1 காசு கூட கமிஷன் வாங்காமல், நான் நேர்மையாக இருந்தேன் என்பது எனக்கு பெருமை. இதுவரை, 6,500 மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். மூன்று நாடகங்கள், 1,000 முறைக்கு மேல் அரங்கேறின. மூன்று முறை, 'லிம்கா' சாதனையில் என் பெயர் இடம் பெற்றது. 90 நாளில் 110 நாடகங்கள், ஒரே நாளில் எட்டு நாடகம் அரங்கேற்றிஉள்ளேன். என், 8 வயது பேத்தி, என் நாடகத்தை பார்த்து இப்போதும் குலுங்கி சிரிக்கிறாள். எனக்கும், பேத்திக்கும், 62 வயது வித்தியாசம். இதுவும் என் வெற்றி.


மேடை நாடகங்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்கள் தேவை?தமிழகத்தில் கர்நாடக இசைக்கும், பரதத்திற்கும் தரும் முக்கியத்துவம், நாடகங்களுக்கு கிடைப்பதில்லை. அரசின் சலுகையும் நாடகத்திற்கு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில், என் கோரிக்கையை ஏற்று, அனைத்து மேடை கலைஞர்களுக்கும், தமிழகத்தில் பஸ் கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி கொடுத்து அரசு உத்தரவிட்டது; 10 ஆயிரம் ரூபாயாக இருந்த கலைவாணர் அரங்கத்தின் வாடகையை, 5,000 ரூபாயாக மாற்றினார். இப்போது கலைவாணர் அரங்கத்தின் வாடகை,2 லட்சம் ரூபாய்; எப்படி நாடகம் போடுவது! இப்போது என் நாடகங்கள், 'ஆன்லைன்' மூலம் நேரடியாக வீட்டுக்கே செல்கின்றன; 150 ரூபாய் கட்டணத்தில் அனைவரும் பார்க்கலாம். தற்போது, 30 -- 40 தமிழ் சேனல்கள் இருக்கும் போது கூட, நாடகம் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், ஜவுளி அதிபர் நல்லி குப்புசாமி, 'தினமலர்' நாளிதழ் போன்றவர்கள் இருப்பதால் தான்.


இன்றைய தொழில்நுட்ப மாற்றம் எப்படி?

டெக்னாலஜிக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை, திரைக்கதைக்கு தருவதில்லை. 'ஓடிடி' எனப்படும், ஆன்லைன் தளங்களில் வரும் படங்களை பார்க்கும் போது, தியேட்டர்காரர்கள் தப்பித்து விட்டனர் என்றே தோன்றுகிறது. 'ஓடிடி' தளங்கள், அளவு கடந்த ஆபாசமாகவும், தியேட்டரில் நிராகரிக்கப்பட்டதை குவிக்கும் குப்பை மாதிரியும் மாறிவிட்டன. கூடிய விரைவில், 'ஓடிடி'க்கும், 'சென்சார்' வரும்; அதில் என் முயற்சியும் இருக்கும்.


சினிமாவில் ஏன் அதிகம் நடிப்பதில்லை?

நான் என்ன அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டேனா என்ன... 'எஸ்.வி.சேகர், மோடி ஆளு' என சில கூட்டம் சொல்லி வருகிறது. அரசியலை விட்டு போனாலும், கலைத் துறையை விட்டு செல்ல மாட்டேன். ஒரு நடிகன் தான், இறப்புக்கு பின்னும் வாழ்வான்; அந்த கலைஞனாக இருக்கவே விரும்புகிறேன்.


மேடை நாடகம், சினிமா, அரசியல் இந்த மூன்றில், உங்களுக்கு எது சிரமமாக இருந்தது?அரசியல் தான் சிரமம். மற்ற இரண்டுமே தொழில். அரசியல் சமூக சேவை. ஆனால், அரசியலை முழு மூச்சான தொழிலாக வைத்திருப்பவர்கள், துாங்கும் போது கூட முகமூடி போட்டு நடிப்பவர்கள் மத்தியில், என்னால் எடுபட முடியவில்லை. நேர்மைக்கும், அரசியலுக்கும் ரொம்ப துாரம். ஆனால், சாக்கடையை சுத்தம் செய்ய, அதில் இறங்கி தான் ஆக வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், நான் போட்டியிடப் போவதில்லை.

ஒரு முறை, 100 சதவீத நேர்மையான எம்.எல்.ஏ.,வாக இருந்து விட்டேன்; அது போதும். முகநுால், டுவிட்டர் போன்ற சமூக தளங்களில், என்னை லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதற்கு காரணம், நேர்மை, வெளிப்படை தன்மை, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வது. இது தான் எனக்கு மைனஸாகவும் அமைந்து விட்டது. அரசியலில் இருந்த போது என் வீட்டில், இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது; மூன்று முறை கல் வீச்சு நடந்தது. இங்கு ஒரு மோடி போதாது; பல ஆயிரம் மோடி வர வேண்டும்.


கமலைப் பற்றி அன்றும், இன்றும்?

கமல், 6 வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்த, மாபெரும் நடிப்பு ராட்சசன். சிவாஜிக்கு பின், 'டெக்னாலஜி'யை பயன்படுத்தி நடிக்கக் கூடியவர். நடிகர் கமலை, 1970 முதல் தெரியும்.'நாடகப்பிரியா' ஆரம்பித்த காலத்தில், 14 பேர், ஆளுக்கு, 5 ரூபாய் போட்டு ஆரம்பித்தோம். அதில் ஒரு, 5 ரூபாய் கமல் போட்டது. மற்ற அனைவரின் பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். கமலுடையதை மட்டும் தர விருப்பப்படவில்லை. நாங்கள் இருவருமே, 100 சதவீதம் மாற்றுக் கருத்து உடையவர்கள். ஆனால் நல்ல நண்பர்கள்.


ரஜினி...?

இவர்கள் இருவரும், எதிரெதிர் சிந்தனை கொண்டவர்கள். இவர்களின் எண்ணம் ஒரே மாதிரி இருந்தாலும், செயல்கள் மாறுபடுத்திக் காட்டும். இருவருமே இரு துருவங்களே.


ஒரு நடிகரின் வாரிசை ஏற்றுக் கொள்ளும் மக்கள், அரசியல் வாரிசை விமர்சிக்கின்றனரே?

சினிமாவில், ஒரு கலைஞனின் மரபணு, மகனுக்கும் இருக்கும். தந்தையின் அடையாளம் மகனுக்கு, 'விசிட்டிங் கார்டு' மாதிரி தான். உழைப்பும், மக்களின் அங்கீகாரமும் இருந்தால் தான், யாராலும் மேலே வர முடியும். அரசியலை பொறுத்தவரை, 'என் குடும்பம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும்; மற்ற யாருமே வரக்கூடாது' என நினைத்தால், அது குற்றமே.

-நமது நிருபர்-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X