சென்னை: 'ஜாதியை பார்த்து ஓட்டுப் போடாமல், சாதிப்பானா என்று பார்த்து ஓட்டு போடுங்கள்' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: ஜனநாயகத்தின் அடிப்படை மக்கள் பங்கேற்பு, ஓட்டு போடுவதில் இருந்தே துவங்குகிறது. இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலை உலகமே உற்று கவனித்தது.தேர்தல் ஆணையத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருந்தன. அதை விட, சில இனக் குழுக்களில், பலருக்கு தனித்தனி பெயர்கள் கிடையாது. அதிகபட்சம் நெட்டையன், குட்டையன், கருப்பன் எனும் அடையாளச்சொல் இருக்கும். தேர்தல் ஆணையம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெயர்கள் அளித்து, ஓட்டுப் போடச் செய்தது வரலாறு.
இந்தியாவில் தனி மனிதர்களுக்கான அந்தஸ்து, அதிகாரம் மற்றும் முக்கியத்துவத்தை ஜனநாயகம் தான் முதன்முதலில் உருவாக்கியது.இன்றும் நாம், சுதந்திர மனிதனாக உணர வில்லை. வேட்பாளர் யார்; அவரது தகுதி என்ன என, எதையும் பரிசீலிக்காமல், ஜாதி, மத, அரசியல் அடையாளங்களை வைத்து, ஓட்டு போடுவது ஜனநாயகத்தை வீழ்த்தும் செயல். ஜாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; சாதிப்பவனா என்று மட்டும் பாருங்கள்.
ஊழல் அரசியல்வாதி, தன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கிறான். பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து, தன் வாரிசுகளையும் அரசியலுக்குக் கொண்டு வருகிறான். ஒரு ஊழல் பேர்வழி, அவன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கும்போது, நீங்கள் ஏன் உங்கள் குடும்பத்தைப் பற்றி, யோசிக்காமல் இருக்கிறீர்கள்? இந்த தமிழகத்தைச் சீரமைக்க வேண்டியது நம் கடமை. அதைச் செய்ய நாம் தவறினால், வரும்காலம் நம்மை மன்னிக்கவே மன்னிக்காது. முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE