கோல்கட்டா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷம் எழுப்பியதற்கு அதிருப்தி தெரிவித்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் செயலுக்கு, நாடு முழுதும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. 'ஹிந்துக்களை எதிர்க்கும் மம்தாவுக்கு, அவர்களது ஓட்டு மட்டும் வேண்டுமா?' என, பொது மக்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுபாஷ் சந்திரபோசின், 125வது பிறந்த நாளையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
அவமதிப்பு
இந்த நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசுவதற்கு வந்தார்; அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டனர். இதனால், மம்தா பானர்ஜி கோபம் அடைந்தார்.'இது அரசு விழா; கட்சி விழா அல்ல. கண்ணியத்துடன் நடக்க வேண்டும். இவ்வாறு கோஷமிடுவது, என்னை அவமதிப்பதாக உள்ளது. அதனால், பேச மாட்டேன்' என, கூறிய மம்தா பானர்ஜி, வெளியேறினார். மம்தாவின் இந்த செய்கைக்கு, நாடு முழுதும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க பா.ஜ., தரப்பில், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க அரசு விழாவில், இதற்கு முன், பிற மதங்களின் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டபோது, மம்தா பானர்ஜி என்ன செய்தார்? ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டால், அது அவமரியாதை செய்வதா?
'ஜோய் பங்களா'
உண்மையில் அவர், நேதாஜியை அவமதித்துள்ளார். நேதாஜியின், 125வது பிறந்த நாள் விழாவில் பேசாமல் வெளியேறியது, அவரை அவமதித்ததாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாள்வியா கூறியுள்ளதாவது: ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எதிர்த்துள்ள மம்தா, அதே மேடையில், 'ஜோய் பங்களா' என்ற கோஷத்தை குறிப்பிட்டுள்ளார். வங்கதேச சுதந்திரத்துக்காக உருவாக்கப்பட்டது, அந்த கோஷம். தற்போது யாருடைய சுதந்திரத்துக்காக அவர் கோஷமிடுகிறார்? நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என, நேதாஜி விரும்பினார். ஆனால், பிளவுபடுத்த மம்தா விரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது கோஷமிட்டது போலத்தான், மம்தா பேசியபோதும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது. மம்தாவுக்கு, இஸ்லாமை போற்றும் கோஷங்கள் மட்டுமே பிடிக்கின்றன; ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை ஏற்க முடியவில்லை. பிரித்தாளும் அரசியலை செய்வதற்கு, நேதாஜி பிறந்த நாள் விழாவை அவர் பயன்படுத்தியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, மேற்கு வங்க மாநில மக்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: தேர்தலின்போது, மம்தாவுக்கு ஹிந்துக்களின் ஓட்டு வேண்டும். ஆனால், ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவார்; அதை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். ஹிந்துக்களை எதிர்க்கும் அவரது போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு, விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலின்போது, மக்கள் சரியான பாடத்தை புகட்டுவர்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
ஆத்திரம் ஏன்?
மம்தா பானர்ஜியின் செய்கை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதரவை பெறும் அரசியலாகத்தான் அமைந்துள்ளது; அதற்காக, ஹிந்துக்களை அவமதிப்பதை ஏற்க முடியாது. கடவுள் ராமர், இந்த நாட்டின் ஆன்மா. அவரது பெயரைக் கேட்டு, மம்தா ஏன் ஆத்திரப்பட வேண்டும்?
சுரேந்திர ஜெயின்
சர்வதேச இணை பொதுச் செயலர், வி.எச்.பி.,
இது அவமானமா?
'ஜெய் ஸ்ரீ ராம்' என்பது, மக்களின் வாழ்த்து கோஷம்; அதை, மம்தா பானர்ஜி மட்டும் அவமானமாக கருதுவது ஏன்? ஒன்பது கோடி மக்கள் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், 30 சதவீத மக்களை மட்டும் மகிழ்விக்க, அவர் இவ்வாறு செய்கிறார்.
கைலாஷ் விஜய்வர்கியா
தேசிய பொதுச் செயலர், பா.ஜ.,
எதிர்க்கலாமா?
மம்தாவின் மரபணுவில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ராட்சச கலாசாரத்தில் பிறந்தவரா அவர் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் தான், கடவுள் ராமரை, அவர் எதிர்க்கிறார்.
சுரேந்திர சிங்
உ.பி., மாநில எம்.எல்.ஏ., - பா.ஜ.,
10 லட்சம் 'லைக்' அள்ளிய பிரதமர் புகைப்படம்
சுதந்திர போராட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் கோல்கட்டா சென்றார். விமானத்தில் இருந்து, பிரதமர் மோடி இறங்கும் புகைப்படம், அவரது, 'பேஸ்புக்' சமூக வலைதள பக்கத்தில், நேற்று முன்தினம் பதிவிடப்பட்டது. அதன் கீழ், 'நேதாஜி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க கோல்கட்டா வந்தடைந்தேன்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படத்துக்கு, 24 மணி நேரத்திற்குள், 10 லட்சம் பேர், 'லைக்' எனப்படும், விருப்பம் தெரிவிப்பதற்கான அடையாளத்தை இட்டுள்ளனர். 14 ஆயிரம் பேர், இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். 47 ஆயிரம் பேர், 'கமென்ட்' எனப்படும், கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE