டேராடூன்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பதவி வகிக்கும் கவுரவம், கல்லுாரி மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமிக்கு, நேற்று வழங்கப்பட்டது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், தேசிய பெண் குழந்தைகள் தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி, பல மாநிலங்களில், பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில், தவுலதாப்பூரை சேர்ந்தவர் ஷிருஷ்டி கோஸ்வாமி, 20. இவர், விவசாய கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 2018- முதல், உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக, ஷிருஷ்டி இருந்து வருகிறார்.
இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை, ஷிருஷ்டிக்கு, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வழங்கினார்.இதையடுத்து, உத்தர கண்டின் முதல்வராக, ஷிருஷ்டி நேற்று பகல், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை செயல்பட்டார். மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில், அவர் முதல்வராக பணியாற்றினார். அரசின் பல வளர்ச்சி திட்டங்களை அவர் ஆய்வு செய்தார். உத்தரகண்ட் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், தங்களின் திட்டங்கள் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அவருக்கு விளக்கம் அளித்தனர்.

முன்னதாக, ஷிருஷ்டி கோஸ்வாமி கூறுகையில், ''இதனை, என்னால் நம்பவே முடியவில்லை. என்னால் இயன்றதை செய்வேன்.''மக்களின் நலனுக்காக, இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், என் பணி இருக்கும்,” என்றார். தமிழில் வெளியான, முதல்வன் படத்தில், ஒருநாள் முதல்வராக அர்ஜுன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE