இந்திய நிகழ்வுகள்
நரபலி: ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளியில் வசித்து வரும் பேராசிரியர்களான புருஷோத்தம், பத்மஜா தம்பதியினர், தனது பெற்ற மகள்களான அலேக்யா (27), சாய் திவ்யா (22) ஆகிய இருவரையும் கொன்றுள்ளனர். அற்புதங்கள் நடக்க வேண்டும் என பூஜை செய்து அதி தீவிர பக்தியால் இரு மகள்களை நரபலி கொடுத்ததாக பெற்றோர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மும்பையை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி!
மும்பை: அகில இந்திய விவசாய சபை சார்பில் ஆயிரக்கணக்கான மஹாராஷ்டிர விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் மும்பை நோக்கி பேரணி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக நிகழ்வுகள்
ரூ.10 கோடி நகை கொள்ளை வழக்கு : ஆயுதம் சப்ளை செய்தவர்களுக்கு போலீஸ் வலை
ஓசூர்: ஓசூர், முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த, ஏழு பேர் கும்பல் கைதான நிலையில், அவர்களுக்கு கைத்துப்பாக்கி சப்ளை செய்தவரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள, முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்துக்குள், கடந்த, 22ல் காலை புகுந்த கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியது.நகையில் இருந்த, ஜி.பி.எஸ்., கருவி மூலம், தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அருகே, கொள்ளை கும்பலில் ஏழு பேரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டனர்.
மேலும், ஏழு கைத்துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், 13 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.முக்கிய குற்றவாளியான அமித் என்பவரையும், கொள்ளை கும்பலுக்கு துப்பாக்கிகள், தோட்டா சப்ளை செய்த, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த லுால்யா பாண்டேவையும், தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தில் தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன், எம்.எல்.ஏ., மற்றும் துணைவேந்தர் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.
அரசு மருத்துவ கல்லுாரியாக அறிவிக்கப்பட்ட, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், தனியார் கல்லுாரிகளை விட, கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அரசு கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி, மாணவ - மாணவியர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 21ம் தேதி, கல்லுாரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளித்து, மாணவர் விடுதிகளை மூடியதுடன், உணவு, தண்ணீர், மின்சாரத்தை துண்டித்தது.
இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நேற்று, 47வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
2 பைக்குகள் மோதல்: மாமியார், மருமகள் பலி
வந்தவாசி: வந்தவாசி அருகே, பைக்குகள் மோதிய விபத்தில், மாமியார், மருமகள் பலியாயினர்.
ரூ.1.75 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று நள்ளிரவு, 2:15 மணிக்கு, சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த, அசருதீன், 22, அஜ்மல்கான், 24, சையது முகமது, 36, சுல்தான் சலாவுதீன், 27; கடலுாரைச் சேர்ந்த, சையது முஸ்தபா, 27, ஆகிய ஐந்து பேரிடம், சந்தேகத்தில், சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில், அவர்களது ஆசன வாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.75 கோடி ரூபாய் மதிப்பிலா, 3.46 கிலோ எடையிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேன்கள் மோதல்: 3 பேர் பலி
பரமக்குடி: ஆம்னி வேன் மீது, சுற்றுலா வேன் மோதி, டிரைவர் உட்பட மூவர் பலியாயினர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த காஜா சாகுல்ஹமீது, 52, ஷாஜகான்பீவி, 60, ஆகியோர் குவைத் செல்ல இருந்தனர்.
இதற்காக, நேற்று காலை, மாருதி ஆம்னி வேனில், மதுரை விமான நிலையத்துக்கு கிளம்பினர். டிரைவர் அகமதுஹசன், 58, ஓட்டினார்.பரமக்குடியை அடுத்த தபால்சாவடி அருகே, எதிரே கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் இருந்து, 20 பேருடன் ராமேஸ்வரம் வந்த சுற்றுலா வேன் மோதியது. இதில், ஆம்னி டிரைவர் அகமதுஹசன், காஜா சாகுல்ஹமீது, ஷாஜகான்பீவி ஆகியோர் பலியாகினர்.சுற்றுலா வேனில் வந்த நான்கு பேர் காயமடைந்தனர். சுற்றுலா வேன் டிரைவர் நாகேந்திரன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தங்கச்சிமடத்தில் மறியலில் ஈடுபட்ட 60 மீனவர்கள் மீது வழக்கு
ராமேஸ்வரம் : தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் படகை மூழ்கடித்து, நால்வரையும் கொலை செய்தனர். பிரேத பரிசோதனை தமிழகத்தில் நடத்தவும், கச்சதீவு அருகே மீன்பிடிஉரிமை பெற்று தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஜன.,22ல் இலங்கை யாழ்பாணம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது.
பின் ஜன.,23ல் இந்திய காவல் படை கப்பல் மூலம் உடலை தமிழகம் கொண்டு வந்த உச்சிப்புளி, மண்டபத்தில் உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.தங்கச்சிமடத்தில் மெசியா உடலை வாங்க மறுத்த மீனவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.இதனால் ராமேஸ்வரம், மதுரை போக்குவரத்து தடை ஏற்பட்டு, பயணிகள் பாதித்தனர்.
மீன் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மீன் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார்
உலக நிகழ்வுகள்
பிரதமருக்கு எதிராக போராட்டம்
ஜெருசலேம்: மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, அவர் பதவி விலக வலியுறுத்தி, பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. தலைநகர் ஜெருசலேமில் ஆயிரக்கணக்கானோர் கூடி, பிரதமருக்கு எதிரான போராட்டங்களை, ஒரு வாரமாக தொடர்ந்து வருகின்றனர்.இறுதி சடங்கிற்கு கட்டணம்ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில், 14 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இங்கு, கொரோனா பலி அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோருக்கு சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டிய இறுதிச் சடங்குகளுக்கு, புரோகிதர்கள், 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அங்குள்ள ஹிந்துக்கள் புகார் கூறியுள்ளனர்.
கப்பல் பணியாளர்கள் கடத்தல்
அங்காரா: மேற்கு ஆப்ரிக்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, துருக்கியின் சரக்கு கப்பலுக்குள் புகுந்த கடற்கொள்ளையர்கள், அஜர்பைஜானைச் சேர்ந்த இன்ஜினியர் பர்மன் இஸ்மாயிலோவ் என்பவரை சுட்டுக் கொன்றனர். அத்துடன் துருக்கியைச் சேர்ந்த, 15 கப்பல் பணியாளர்களை கடத்தி சென்றுள்ளதாக, அதிகாரிகள் நேற்று கூறினர்.பாலியல் சட்டங்களில் திருத்தம்பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில், பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர், தன் வளர்ப்பு மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல்கள், சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ''பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்,'' என, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 11 தொழிலாளர்கள் மீட்பு -
பீஜிங்: சீனாவில், தங்கச் சுரங்கத்துக்குள் சிக்கிய, 22 தொழிலாளர்களில், நேற்று வரை, 11 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ஷாண்டோங் மாகாணம் கிக்சியா பகுதியில், தங்கச் சுரங்கம் தோண்டும் பணிகள் நடக்கின்றன. கடந்த, 10ம் தேதி சுரங்க பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், முன் பகுதி முழுமையாக மூடப்பட்டது.
இதனால், சுரங்கத்திற்குள், 240 மீ., ஆழத்தில் பணிகளை மேற்கொண்ட, 22 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இதையடுத்து, அங்கு வந்த மீட்பு படையினரின் தொடர் நடவடிக்கைகளால், 11 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள மேலும், 10 பேருடன், மீட்பு படையினர் தொடர்பில் உள்ளனர். இதனால் மற்றொருவர் பலியாகி இருக்கலாம் அல்லது கோமா நிலைக்கு சென்றிருக்கலாம் என, தெரிகிறது.சுரங்கத்தில் சிக்கியுள்ளோருக்கு உணவு, மருத்துவ பொருட்கள், ஊட்டச்சத்து கரைசல் ஆகியவை, ஒரு குழாய் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் கூறும்போது, 'மீட்பு பணிகளில், 407 உபகரணங்களின் உதவியுடன், 633 பேர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தின் நுழைவு பகுதியில் உள்ள, 70 டன் மண் மற்றும் கற்களை அகற்ற, 15 நாட்கள் வரை ஆகலாம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE