சென்னை: திமுக ஆட்சி அமைத்ததும் மக்களின் பிரச்னைகள் களைய 234 தொகுதிகளுக்கும் சென்று மனுக்களை பெற முடிவு செய்துள்ளார். பெறப்படும் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வளிக்கப்படும் எனவும், இதற்கென தனித்துறை உருவாக்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபைக்கூட்டம் என்ற பெயரில் பிரசாரத்தை முன்வைத்தார். இந்நிலையில் தனது அடுத்தக்கட்ட தேர்தல் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை இன்று (ஜன.,25) வெளியிட்டார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லம் எதிரே உள்ள சாலையில் மேடை அமைத்து, நாற்காலிகள் போட்டு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்தது இந்த அதிமுக அரசு. தமிழகத்தின் கடன்சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்தது, வேலைவாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்தது,

100 நாட்களில் தீர்வு:
கொரானா காலத்தில் தமிழக மக்களை அதிமுக அரசு கைவிட்டு விட்டது. ஆட்சியில் இல்லையெனினும் மக்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் உதவிகள் செய்தது திமுக. ஸ்டாலின் ஆகிய நான் தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் ஒரு உறுதியை தருகிறேன். "உங்கள் பிரச்னையை தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்களில் உங்கள் பிரச்னையை தீர்ப்பதே வேலை". போர்க்கால அடிப்படையில் மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்போம் என மக்களிடம் உறுதியளிக்கிறேன்.
புதிய வியூகத்தில் பிரசாரம்:
விடியலை நோக்கி ஸ்டாலின், மக்கள் கிராம சபைக் கூட்டத்தை தொடர்ந்து வரும் 29ம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். புதிய வியூகத்துடன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எல்லா துறைகளும் அதல பாதாளத்தில் உள்ளன. இதனால், மக்களின் பிரச்னைகளை தீர்க்க ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய வியூகத்துடன் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளேன். ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய கோணத்தில் பிரசாரத்தை துவக்குகிறேன். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதி மக்களையும் சந்திக்கிறேன்.

அங்குள்ள பிரச்னைகள் குறித்து மக்கள் எனக்கு கோரிக்கை மனுக்களை தரலாம். மனுக்களை பதிவு எண்ணுடன் கூடிய படிவமாக என்னிடம் வழங்கலாம். அதனை நானே சீல் வைத்து மனுக்களை பெறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த மனுக்களை பரிசீலித்து 100 நாட்களில் தீர்வு காண்போம். என்னிடம் நேரடியாக அளிக்க முடியாதவர்கள் www.stalinani.com என்ற இணையதளம் வாயிலாகவோ, 9171091710 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தங்களின் பிரச்னைகளை பதிவு செய்யலாம். இதை 100 நாட்களில் பரிசீலித்து தீர்வளிக்கப்படும். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு, நான் மட்டுமே பொறுப்பு.

தனித்துறை:
மக்களின் கோரிக்கைகளை தீர்க்க எனது நேரடிக் கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் துறை, மாவட்ட வாரியாக, கிராம வாரியாக முகாம்களை அமைத்து மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும். தமிழகத்தின் 1 கோடி குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பு. முறையாக திட்டமிட்டே புதிய வியூகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்ய தவறியதை திமுக செய்யும். திமுக.,வின் தேர்தல் அறிக்கை தனியே வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE