முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 'வரலாற்றிலேயே முதன்முறையாக' எனக் கூறும் அளவுக்கு, இன்றைய குடியரசு தின அணிவகுப்பு விழா, பல்வேறு மாற்றங்களுடன் டில்லியில் நடக்கவுள்ளது. நாட்டின், 72வது குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்காக, இன்று, டில்லி ராஜபாதை பகுதியில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன; அவற்றில், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு, ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த, 1952, 1953 மற்றும் 1966 ஆகிய ஆண்டுகளிலும், குடியரசு தின கொண்டாட்டங்களில், சிறப்பு விருந்தினர் யாரும் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்தது. கொரோனா சூழல் காரணமாக, தன் வருகையை, அவர் ரத்து செய்துவிட்டார்.
அனுமதி கிடையாது
இதனால், 1966ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக, சிறப்பு விருந்தினர் இல்லாமல், குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கஉள்ளன.வழக்கமாக, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கான, 'பாஸ்'கள், குறைக்கப்பட்டு விட்டன. வெறும், 25 ஆயிரம் பேர் மட்டுமே, இன்றைய நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், 4,000 பேர் மட்டுமே பொதுமக்கள். ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையும், 300லிருந்து, 200 ஆக குறைக்கப்பட்டு விட்டது.அணிவகுப்பில் இடம்பெறும் குழுக்களின் அளவும், 144லிருந்து, 96 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
14 வயதுக்கு குறைவான குழந்தைகள் யாருக்கும், இந்த ஆண்டு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு வர, அனுமதி கிடையாது.ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது, பார்வையாளர்களாக பங்கேற்கும் பொதுமக்கள், அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் என அனைவருமே, முக கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, அணிவகுப்பு ரதங்கள் எல்லாம், வழக்கமாக செங்கோட்டை வரை சென்று, அங்கு முடிவடையும்.
சாகசம்
இந்த ஆண்டு, அந்த ரதங்கள், ராஜ்பாத் தாண்டியதும், நேஷனல் ஸ்டேடியத்திலேயே நிறுத்தப்பட்டு விடும்.எப்போதுமே, 8.5 கி.மீ., துாரம் வரை, அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த துாரம் குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு, 3.5 கி.மீ., துாரம் வரையில் மட்டுமே அணிவகுப்பு நடக்கும். ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் பைக் வாகனங்களில், வீரர்கள் அணிவகுத்துச் செல்வது, பார்வையாளர்களை வெகுவாக கவரும். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த சாகச நிகழ்ச்சி, இந்த ஆண்டு அணிவகுப்பில் இருக்காது.ராணுவத்தில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும், விருது வழங்கும் நிகழ்ச்சியும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்ற காரணத்திற்காக, இன்று நடைபெறாது.ரபேல் விமானம், கடந்த ஆண்டே அணிவகுப்பில் இடம்பெற்றாலும், இந்த ஆண்டு, முதல்முறையாக, வானில் வெகு அட்டகாசமாக பறந்து, செங்குத்தாக இங்கும் அங்கும் பாய்ந்து, சாகசம் செய்யஉள்ளது.
பலத்த பாதுகாப்பு
முதன் முறையாக இந்த ஆண்டு, போர் விமானங்களை இயக்கும் பெண் பைலட்டுகளின் அணிவகுப்பு சாகச நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.மத்திய ரிசர்வ் படையின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு ரதம், முதன்முறையாக அணிவகுப்பில் இடம்பெறஉள்ளது.காஷ்மீரிலிருந்து பிரிந்த லடாக் யூனியன் பிரதேசம் சார்பில் அமைக்கப்பட்ட ரதம், முதன்முறையாக அணிவகுப்பில்
வரவுள்ளது. தமிழகம் சார்பில், மகாபலிபுர சிற்பங்களுடன் கூடிய ரதம், இன்றைய அணிவகுப்பில் வரவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதன் முறையாக வங்கதேச ராணுவம்
வங்கதேச நாடு சுதந்திரம் அடைந்து, 50 ஆண்டுகளாகியுள்ள நிலையில், அந்நாடு உருவாக இந்தியா செய்த உதவியை நினைவுபடுத்தும் வகையில், முதன்முறையாக, அந்நாட்டு ராணுவமும், இன்றைய அணிவகுப்பில் இடம் பெறப் போகிறது. இதற்காக, அந்நாட்டின் முப்படை வீரர்கள், 122 பேர், டில்லி வந்துள்ளனர். பிரதமருடன் 100 மாணவர்கள்டில்லியில் இன்று நடக்கும் குடியரசு தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். நாடு முழுதும் இருந்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், 100 பேர், பிரதமருடன் அமர்ந்து, குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பின், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுடன், அவர்கள் கலந்துரையாட உள்ளனர். - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE