சென்னை :''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஜன. 29ம் தேதி திருவண்ணாமலையில் துவக்குகிறேன். 234 தொகுதிகளிலும் 30 நாட்கள் பயணம் செய்து மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாட்களில் அந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன்; இது மக்கள் மீது சத்தியம்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் அவர் அளித்த பேட்டி:
பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அதலபாதாளத்திற்கு போய் விட்டது. அரசின் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தின் கடன் சுமை ௫ லட்சம் கோடி ரூபாய்; விஷம் போல விலைவாசி உயர்வு; சட்டம் ஒழுங்கு சீரழிவு.கொரோனா காலத்தில் மக்களை அ.தி.மு.க. அரசு கைவிட்டது. ஆனால் தி.மு.க. கைவிடவில்லை. 'ஒன்றிணைவோம் வா' துவங்கி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் மக்கள் கிராம சபை' வரை தி.மு.க.வினர் மக்களை சந்தித்து வருகின்றனர்.
ஸ்டாலின் ஆகிய நான் தமிழக மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதே என் முதல் பணி. என் அரசின் முதல் ௧௦௦ நாட்களில் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். இதற்கு நான் பொறுப்பு. இதுவே தமிழக மக்களுக்கு நான் அளிக்கும் உறுதி மொழி.ஜன. ௨௯ல் திருவண்ணாமலையில் பிரசாரத்தை துவக்குகிறேன்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்பது இந்த பயணத்தின் பெயர். அடுத்த ௩௦ நாட்களில் ௨௩௪ தொகுதிகளில் கலந்துரையாடல் கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன். இந்த கூட்டங்களில் அந்தந்த தொகுதி மக்கள் பங்கேற்று தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி தரலாம்.மக்கள் தரும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனி பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகை சீட்டும் வழங்கப்படும். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக 'சீல்' வைக்கப்படும்.இந்த கூட்டங்களில் பங்கேற்க இயலாதோர் 'ஸ்டாலின் அணி' எனும் அலைபேசி செயலி வாயிலாகவோ பிரத்யேக இணையதளமான www.stalinani.com வாயிலாகவோ ௯௧௭௧௦ ௯௧௭௧௦ என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ தங்கள் பிரச்னைகளை பதிவு செய்யலாம். தமிழக அரசில் தனித்துறை உருவாக்கி 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது அண்ணாதுரை கருணாநிதி மற்றும் மக்கள் மீது சத்தியம். சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்; செய்வதைத் தான் சொல்வான் இந்த ஸ்டாலின். தமிழக அரசின் கடனை அடைப்பதற்கு தனித் திட்டம் இருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக கருத்து கேட்கப்படுகிறது. மாவட்டங்களில் இருக்கும் பொது பிரச்னைகள் அதில் இடம்பெறும். ஒருவரின் தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக இந்த புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்குவது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் தடுக்கப்படும். முதல்வரின் தொலைபேசி எண் திட்டம் பெயரளவில் செயல்படுகிறது. அத்திட்டத்தையும் நாங்கள் முறைப்படுத்துவோம். மக்களின் தனிப்பட்ட பிரச்னைகள் ௧௦௦ நாட்களில் தீர்த்து வைக்கப்படும். உதாரணமாக கட்டடங்கள் கட்ட வேண்டும்; தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் போன்ற பிரச்னைகள் இடம்பெறாது.நுாறு நாட்களில் பட்டா பிரச்னை, குடிநீர் பிரச்னை, பள்ளி பிரச்னை, ஆசிரியர் பிரச்னை, ஓய்வூதிய பிரச்னை, முதியோர் உதவித் தொகை பிரச்னை, நுாறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை போன்ற பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும்.கூட்டணி பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையாக அறிவிக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
அப்படியே அன்புமணியை 'காப்பி' அடித்த 'ஐபேக்'
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டார். 'அன்புமணியாகிய நான்...' என்ற உறுதிமொழியை மேடையில் அறிவித்து மாவட்ட வாரியாக அவர் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி; அன்புமணியாகிய நான்; உங்கள் ஊர்ல உங்கள் அன்புமணி' என்ற கோஷத்துடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஸ்டைலில் அன்புமணி ௩௨ மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்தார்.
அதில் பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற பிரசார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதே பாணியை பின்பற்றி வரும் சட்டபை தேர்தலில் 'ஸ்டாலின் ஆகிய நான்' என்றும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்றும் புதிய பிரசாரத் திட்டத்தை ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த புதிய பிரசார திட்டத்தை வகுத்து கொடுத்திருப்பது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான 'ஐபேக்' குழுவினர் தான். அன்புமணி பாணியை ஐபேக் காப்பி அடித்து விட்டது' என பா.ம.க.வினர் விமர்சிக்கின்றனர்.
'ஸ்டாலின் அறிவிப்பு தேர்தல் நாடகம்'
ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன; அதை தீர்க்கவே வழியில்லை. தற்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று அறிவித்திருப்பது தேர்தல் நாடகம். எங்கள் படங்கள் ஓடும். பிராசந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது; டப்பாவில் தான் இருக்கும். எப்படித்தான் புது விஷயங்கள் அறிவித்தாலும் தமிழக மக்கள் 'நீங்கள் யார்' என்று கேட்பர்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ராஜிவ் 28 முறை தமிழகம் வந்தார்; ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தற்போது ராகுல் வந்துள்ளார். ஆனால் வெற்றி பெற முடியாது.
ஜெயக்குமார்,
மீன்வளத்துறை அமைச்சர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE