கரூர் :''தமிழக மக்கள் கடினமான சூழ்நிலையிலும், புன்னகையுடன் இருப்பர். ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுயமரியாதை உடையவர்கள். நான் திருக்குறள் நூலை படிக்க ஆரம்பித்துளேன், '' என, காங்., - எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பஞ்., மாரிகவுண்டன் பாளையத்தில், நேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல்,விவசாயிகளின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில், விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் கடினமாக உள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை கொடூரமாக மாறி வருகிறது.
விவசாயத்தை தகர்த்து எறியக்கூடிய, கொள்கை முடிவை, பா.ஜ., அரசு எடுத்து வருகிறது.மத்திய வேளாண் துறை அமைச்சரை விட, இங்கு வந்துள்ள விவசாயிகளுக்கு பல தகவல்கள் தெரிந்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது.புதிய வேளாண் சட்டம் வாயிலாக, மண்டி கடைகளை ஒழித்து விடுவர். புதிய வேளாண் சட்டப்படி, விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், பணம் தரவில்லை என்றால், நீதிமன்றம் செல்ல முடியாது.பணம் இருப்பவர்கள், விவசாய விளை பொருட்களை மொத்தமாக வாங்கி, பதுக்கி கொள்வர்.இதனால், விவசாயிகள் மட்டுமல்ல, மற்ற பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.
அதற்காகவே, டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, காங்., தேர்தல் அறிக்கையில், ஏழை குடும்பத்துக்கு ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, தெரிவித்தோம்.அந்த அளவுக்கு பணம், மத்திய அரசிடம் உள்ளது. தேவைக்கு அதிகமான அளவில் பணம் இருந்தும், மத்திய, பா.ஜ., அரசு ஏழைகளுக்கு தர மறுக்கிறது.விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காகவும் உழைக்க, காங்., தயாராக உள்ளது. நீங்கள் வரும் காலங்களில், காங்., கட்சியுடன் இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்காக, உழைக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
.
முன்னதாக, கரூர், பஸ் ஸ்டாண்ட் அருகே, முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்த ராகுல் பேசியதாவது: தமிழக மக்கள் கடினமான சூழ்நிலையிலும், புன்னகையுடன் இருப்பர். ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுயமரியாதை உடையவர்கள். 2,000 ஆண்டு பழமை வாய்ந்த திருக்குறள் நூலை படிக்க ஆரம்பித்துளேன்.ஆனால், பிரதமர் மோடி, திருக்குறள் புத்தகத்தை திறந்து கூட பார்த்திருக்க மாட்டார். அதை படித்து இருந்தால், தமிழக மக்களை பற்றி, அவர் புரிந்து கொண்டிருப்பார்.
தமிழர்கள் ஒரு மடங்கு அன்பு செலுத்தினால், இரண்டு மடங்கு அன்பை திருப்பி தருவர்.
'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே வரலாறு' என கூறும், பிரதமர் மோடி யாரை அவமதிக்கிறார்.
பிரதமர் மோடியிடம், தமிழக அரசு கட்டுப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். ஆனால், தமிழக அரசு மீது பயன்படுத்தும் விஷயத்தில் தயக்கம் காட்டுகிறார். தமிழக அரசை, 'ரிமோட் கன்ட்ரோல்' வாயிலாக, பிரதமர் மோடி இயக்கி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில், ரிமோட் கன்ட்ரோலில் உள்ள, பேட்டரியை தமிழக மக்கள் எடுத்து எறிய வேண்டும். தமிழகத்தில் மாற்று அரசை ஏற்படுத்த, உங்களுக்கு உதவி புரியவே, நான் தமிழகம் வந்துள்ளேன். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE