வஞ்சமின்றி நடக்குது சூதாட்டம்... லஞ்சமின்றி நகராது அதிகார கூட்டம்

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021
Advertisement
சித்ராவின் வீட்டுக்கு வந்த மித்ரா, ''ஹாய்க்கா…எப்டி இருக்கீங்க…'' என்ற நலம் விசாரிப்புடன், சோபாவில் அமர்ந்தாள்.சுடச்சுட டீ எடுத்து வந்தாள் சித்ரா. ''வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சுக்கா… பகல் நேரத்துல நல்ல வெயில். இனி, ஜூஸ் தான் குடிக்கணும் போல'' என்றவாறே, டீயை உறிஞ்சினாள் மித்ரா.''உண்மைதான்டி, கிளைமேட் மாறுது. போன வாரம், ராகுல் கலந்துகிட்ட கூட்டத்துக்கு
 வஞ்சமின்றி நடக்குது சூதாட்டம்... லஞ்சமின்றி நகராது அதிகார கூட்டம்

சித்ராவின் வீட்டுக்கு வந்த மித்ரா, ''ஹாய்க்கா…எப்டி இருக்கீங்க…'' என்ற நலம் விசாரிப்புடன், சோபாவில் அமர்ந்தாள்.சுடச்சுட டீ எடுத்து வந்தாள் சித்ரா.''வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சுக்கா… பகல் நேரத்துல நல்ல வெயில். இனி, ஜூஸ் தான் குடிக்கணும் போல'' என்றவாறே, டீயை உறிஞ்சினாள் மித்ரா.

''உண்மைதான்டி, கிளைமேட் மாறுது. போன வாரம், ராகுல் கலந்துகிட்ட கூட்டத்துக்கு போனயா?''

''ஆமாங்க்கா. உள்ளூர் காங்கிரஸ்காரங்க 'பரபர'ன்னு வேலை செஞ்சு கூட்டத்தை கூட்டிட்டாங்க. ஆனா, மாவட்ட நிர்வாகி ஒத்துழைப்பு கொடுக்கலையாம். அவரு, காங்கயம் தொகுதியில் நிக்கறதுக்கு 'சீட்' கேட்கிறாரு. அதனால, அங்க மட்டுமே கவனம் செலுத்திட்டார். திருப்பூரில் எப்டிங்க்கா...,''

''கலெக்டர் ஆபீசுக்கு எதிரிலுள்ள ஒரு மண்டபத்தில், தொழிலாளர்களை சந்திச்சாரு. இதுக்காக, ஆயிரம் பேரை திரட்ட முடியாம, தோழர்கள்கிட்ட ஹெல்ப் கேட்டதால, அவங்க ஆட்களை அனுப்பி வச்சாங்களாம்...,''''ஓஹோ...'' என மித்ரா சொன்னவுடன், ''வா, மித்து... மார்க்கெட்டு வரை போயிட்டு வந்துடலாம்,'' என சித்ரா கூற, இருவரும் கிளம்பினர்.

''ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த சூரிய கட்சியோட செயல் வீரர்கள் கூட்டத்துல, அவிநாசி ஒன்றிய கோஷ்டி பூசல் பெரிய சலசலப்பை ஏற்படுத்திடுச்சாம்'' என்றாள் சித்ரா.

''அப்படி என்ன மேட்டர்?''

''போன மாசம், கைகாட்டிப்புதுாரில், ஐமாஸ் விளக்கு பொருத்தி, அவங்க கட்சி எம்.பி., தலைமையில திறப்பு விழா நடந்துச்சு. விழாவில, பூண்டி பகுதி பொறுப்பாளர் கலந்துக்கலையாம். ஏன் வரலைன்னு, மூத்த நிர்வாகி கேட்டதற்கு, 'காச்...மூச்...'னு கத்தினாராம்,''

''இந்த விவகாரத்த, திருப்பூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்துல, கிளப்பியிருக்காரு மூத்த நிர்வாகி. ஆவேசப்பட்ட அவர் ஒரு கட்டத்தில, ஓபன் மைக்கில, 'அவனை கொல்லாம விடமாட்டேன்'னு பேசினார்,''

''இதைக்கேட்ட மாவட்ட பொறுப்பாளர், பிரச்னை பெருசாகாம இருக்க, 'மைக்' ஆப் பண்ணிட்டு, எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம். இப்படியெல்லாம் பேசாதீங்கன்னு, அவரை 'கூல்' பண்ணாராம்,'' என சித்ரா விளக்கினாள்.அப்போது, சிக்னலில் 'ரெட்' வரவே, வண்டியை நிறுத்தினாள் சித்ரா.

அருகே பைக்கில் வந்த ஒருவர், ''இந்த பழனிசாமி, வரதராஜன் ரெண்டு பேரையும், எவிடென்ஸ் கொண்டுட்டு மீட்டிங் வரச்சொல்லுங்க,'' என சத்தமாக பேசி சென்றார்.

''எவிடென்ஸ்ன்னு சொன்னதும் தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க்கா. ஏதோ ஒரு வீடியோவை வச்சுகிட்டு, ஆர்.டி.ஓ.வை ஒருத்தர், 'பிளாக் மெயில்' பண்றாராம்,'' புதிர் போட்டாள் மித்ரா.

''அது என்ன மேட்டர்டி?''

''வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்க ரெய்டு நடத்தி, அஞ்சு லட்சம் ரூபாய பறிமுதல் பண்ணாங்க. ஆர்.டி.ஓ.,வோட சேர்த்து, மொத்தம் ஏழு பேர் மேல கேஸூம் போட்டுட்டாங்க,''

''இந்த நிலைமைல, ஒரு டிரைவிங் ஸ்கூல் ஓனர், ஒரு வீடியோ எவிடென்ஸ் தன்கிட்ட இருக்கிறதாவும், பலமா 'கவனிக்கலைன்னா' லீக்-அவுட் பண்ணிடுவேன்னு, 'டீல்' பேசறாராம். அது என்னன்னு தெரியாம, ஆர்.டி.ஓ., ஆபீசர்ஸ் குழம்பிட்டு இருக்காங்களாம்,''

''இந்த விஷயமா பக்கத்து வீட்ல இருக்க விஸ்வநாதன் அண்ணன் கூட, என்கிட்ட பேசினாரு. கவர்ன்மென்ட் ஆபீசுக்குள்ள புரோக்கர்களையும், டிரைவிங் ஸ்கூல்காரர்களையும் சுதந்திரமா திரிய விட்டா இப்படி தான் இருக்கும்,'' என்றாள் சித்ரா.

''எலக்ஷன் டைம்ல, பம்பரம் வேகமா சுழலும்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க'' என்றாள் சித்ரா.

''அய்யோ...குழப்பறீங்களே. தெளிவா சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.

''ஒவ்வொரு வருஷமும், பம்பரம் கட்சிக்காரங்க பொங்கல் விழா நடத்தி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு பரிசுகளை அள்ளித்தருவாங்க. இந்த வருஷம் சாமுண்டிபுரத்துல பொங்கல் விழா நடத்தினாங்க,''''எலக்ஷன் வர்றதால, பரிசும் பலமா இருக்கும்ன்னு நினைச்சு, நிறைய லேடீஸ் போட்டியில கலந்துக்கிட்டாங்க. ஆனா, முதல் பரிசோட நிறுத்திட்டாங்க... ''

''அது ஒண்ணுமில்லைக்கா. இந்த தடவ எலக்ஷன்ல, சூரிய கட்சியோட தான் சுழல வேண்டியிருக்கு. திருப்பூர்ல சீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால தான், செலவை குறைக்க, பரிசுகளை அள்ளி தராம கிள்ளி கொடுத்திருக்காங்க,''

''யெஸ். கரெக்டா சொன்ன, '' என்ற சித்ரா மார்க்கெட் வளாகத்தில், வண்டியை பார்க்கிங் செய்தாள்.''கட்சி தலைமைக்கு கட்டுப்படணும்'னு மினிஸ்டர் சொல்லிட்டாராம்,'' நடந்தபடியே பேசினாள் மித்ரா.''என்னடி… சம்பந்தம் இல்லாம பேசுற,''

''அக்கா... திருப்பூர்ல இருக்க ஆளுங்கட்சிக்காரங்க, கோவை வி.ஐ.பி.,க்கு 'ஐஸ்' வைக்க பாக்கறாங்களாம். இத புரிஞ்சுகிட்ட மினிஸ்டர், 'எல்லோரும் 'சீட்' கிடைக்கும்னு எதிர்பார்க்காதீங்க; யாரை நிறுத்தினாலும், ஜெயிக்க வைக்கணும்'னு, பொதுக்கூட்டத்தில, 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லிட்டாராம். இதனால, 'சிட்டிங்' வி.ஐ.பி.,ங்க 'ஷாக்' ஆயிட்டாங்களாம்,

''காய்கறி வாங்கிய இருவரும், வீடு நோக்கி திரும்பினர். எதிர் திசையில் விவசாயிகள் சிலர் கூட்டமாக வந்தனர்.''அவங்க எல்லாம், பி.ஏ.பி., பாசன விவசாயிங்க. ராத்திரியில, தண்ணிய சிலர் திருடறாங்களாம். அவங்களுக்கு ஒரு ஆபீசர் சப்போர்ட் பண்றதை, கம்ப்ளைன்ட் பண்ண வந்திருக்காங்க போல…'' என்றாள் சித்ரா.

அப்போது, எதிரில் 'குமார்' என பெயரிட்ட பஸ் வேகமாக சென்றது. அதைப்பார்த்த மித்ரா, ''எவ்ளோ சொன்னாலும், இவங்க திருந்தவே மாட்டாங்க. இத்தனை கூட்டத்தில், இவ்வளவு ஸ்பீடு தேவையா?'' என ஆவேசப்பட்டாள்.

''எல்லா, வண்டியுமே இப்படித்தான் ஸ்பீடா போறாங்க. கடுமையான நடவடிக்கை மட்டுமே தீர்வாகும்,'' சொன்ன, சித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது. ''அப்படியா, இன்னும் கெடைக்கலையா, சரிவிடுங்க; என் பக்கத்து வீட்ல ஒரு எஸ்.ஐ., இருக்காரு. அவர்கிட்ட சொல்றேன்,'' என்ற சித்ரா, போனை அணைத்தாள்.

''என்னக்கா... முக்கியமான விஷயம் போல,''''ஆமான்டி. அவிநாசியில திருட்டு கேஸ் தொடர்பா எப்.ஐ.ஆர்., போட மாட்டேங்கறாங்களாம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, செயின் பறிப்பு, மாட்டாஸ்பத்திரி கிட்ட, கடையை உடைச்சு பேட்டரி திருட்டுன்னு நிறைய பிரச்னை நடந்திருக்க,''

''இதுதொடர்பா எப். ஐ.ஆர்., போட மாட்டேங்கறாங்களாம். இதுல என்ன கொடுமைன்னா, பாதிக்கப்பட்டவங்க கிட்ட, எப்படி திருடு போச்சு? திருட்டு நடக்க சான்ேஸ இல்லையே'ன்னு, கேள்வி மேல் கேள்வி கேட்டு, டென்ஷனாக்கி அனுப்பிடறாங்களாம்,''

''ஏற்கனவே, பொருளை பறி கொடுத்து வர்றவங்கிட்ட இப்டி கேள்வி கேட்டா, அவங்க எங்கதான் போவாங்க...'' என்ற மித்ரா, ''சிட்டி மதுவிலக்கு பிரிவுல, கோபி வி.ஐ.பி.,யுடன் வந்த ஆபீசரு ஒருத்தரு ஸ்டேஷனுக்கு வர்றாரா... இல்லையான்னு கூட தெரியறது இல்லையாம்,''

''இப்படி ரொம்ப வருஷமா, நங்கூரம் போட்டு, உட்கார்ந்த இடத்திலயே, மாமூல் வாங்கிட்டு, வண்டிய ஓட்டறாராம்,''

''அக்கா... இதேபோல, சிட்டிக்குள்ள 'கிளப்'களில் நடந்த சூதாட்டம், ஒவ்வொன்னா வெளிய தெரிய ஆரம்பிக்குது. இதில, சூரிய கட்சிக்காரங்க உட்பட, வி.ஐ.பி.,ங்க பலருக்கும் தொடர்பு இருக்கிறதால, போலீஸ்காரங்க சைலன்ட்டா இருக்காங்களாம். குறிப்பாக, பி.என்., ரோட்ல, 'வடக்கு'னு பேர் வெச்ச கிளப்புல, சூதாட்டம் களை கட்டுதாம்,''

''போலீசுக்கு தெரியாதா?''

''தெரியாமலிருக்குமா? இந்த கிளப்பை, ஆறு லாயர்ஸ் ஒன்னு சேர்ந்து நடத்துறாங்களாம். கணபதி கடவுளின் பேர் கொண்டவரோட இடத்தை 'லீசு'க்கு பிடிச்சு, ஓட்டறாங்களாம். பக்கத்திலயே, ஏ.சி., பாரும் இருக்கறதால, லட்சக்கணக்கான ரூபாய் 'பெட்' கட்டி, ஆட்டம் களைகட்டுதாம்,''

''ஏதாவது ரெய்டுன்னா, 'வேலம்....' ஸ்டேஷனிலிருந்து தகவல் முன்கூட்டியே போயிடுதாம். அங்க ஒன்னும் நடக்கறதில்லைனு, போலீசும் ஈஸியா சொல்லிடறாங்களாம். பெரிய ஆபீசருதான், இதப்பத்தி கேட்கணும்,''

''இதையெல்லாம்கூட மினிஸ்டர்ஸ் கண்டுக்கிறதில்லை'' என சம்பந்தமில்லாமல், பேசினாள் சித்ரா.

''எதப்பத்திங்க்கா?''

''சமீபத்துல, எஸ்.பி., ஆபீஸ் வளாகத்தில போலீஸ் கேன்டீன் திறந்தாங்க. இதுல, போலீஸ் ஆபீசர்ஸ், கலெக்டர், நிறைய பேரு கலந்துகிட்டாங்க. அதில, கலந்துகிட்ட உடுமலை வி.ஐ.பி., பெரிய போலீஸ் ஆபீசர்கிட்ட, 'ஊட்டிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஒரு அதிகாரியை, பழைய இடத்துக்கே மாத்த சொல்லி, 'ரெக்கமண்ட்' செஞ்சிருக்காரு,''

''என்ன சொல்றதுனு தெரியாம, நெளிஞ்சுகிட்டே தலையை ஆட்டினாராம் அந்த பெரிய போலீஸ் ஆபீசரு,'' என்ற சித்ரா, மித்ரா வீட்டு முன் வண்டியை நிறுத்தினாள்.

"தேங்ஸ்க்கா...'' என மித்ரா சொல்லவும், ''பை... பை...'' என்றவாறே, புறப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X