புதுடில்லி : கொரோனா நெருக்கடி காலத்தில், பிற நாடுகளுக்கு உதவிகளை செய்து, தலைமைப் பண்புடன் விளங்கும் இந்தியாவால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது.

கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், சில அமெரிக்க பத்திரிகைகள், 'இந்தியாவில் கொரோனாவால் பேரழிவு ஏற்படும்' என்ற செய்திகளை வெளியிட்டன. எனினும், அந்த செய்திகள் பொய்யாகின. நம் நாட்டில், வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையே, நம் நாட்டில், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல், இதர நாடுகளுக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பிரேசிலுக்கு, 20 லட்சம்; மொரோக்கோவுக்கு, 20 லட்சம்; வங்கதேசத்துக்கு, 20 லட்சம்; மியான்மருக்கு, 15 லட்சம்; நேபாளத்திற்கு, 10 லட்சம் டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதைத்தவிர, ஏற்கனவே, 'ஹைட்ராக்சிக் குளோரோக்வின், ரெம்டெசிவிர்' உள்ளிட்ட மருந்துகளையும், பரிசோதனை உபகரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றையும், வெளிநாடுகளுக்கு வழங்கி, இந்தியா உதவி செய்தது.
உலகத்தை ஒரே குடும்பமாக கருதும் இந்தியாவின் இந்த உதவிகளை, சர்வதேச தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, நம் அண்டை நாடான சீனா, கொரோனா நெருக்கடியில், பிறருக்கு உதவாமல் இருந்து வருகிறது. வங்கதேசத்திற்கு, 1.10 லட்சம் டோஸ்கள் மருந்து வழங்க முன்வந்த சீனா, பரிசோதனைக்கான செலவை பகிர்ந்துகொள்ள, வங்கதேச அரசுக்கு நிபந்தனை விதித்தது.

எனினும், அந்த நிபந்தனையை புறக்கணித்த வங்கதேசம், இந்தியாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.கொரோனா நெருக்கடி காலத்தில், தலைமைப் பண்புடன் விளங்கி வரும் இந்தியாவுக்கு, பெரும்பாலான நாடுகள் ஆதரவாக இருப்பதால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளதாக கருதப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE