திருப்பூர் : தாராபுரத்தில் காங். மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். நேற்று முன்தினம் மாலை தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார். கூட்டம் முடிந்த பின் தாராபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார்.
அங்கு ராகுல் தலைமையில் 45 நிமிடம் நடந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் கார்த்தி, ஜோதிமணி உட்பட சிலர் மட்டும் பங்கேற்றனர்.

'தமிழகத்தில் ராகுல் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் தாக்கம் மக்களிடையே உள்ள வரவேற்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வுடன் தான் கூட்டணி என முடிவாகி உள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. திருப்பூரில் முதல்கட்டமாக நடந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தாராபுரத்திலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது' என்று காங். வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி., பங்கேற்றார். நேற்று பிரசாரம் முடித்து இரவு திண்டுக்கல் வழியாக மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ராகுல் டில்லி புறப்பட்டு சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE