ஒரு பெண் என்ற முறையில், சசிகலாவின் விடுதலையை வரவேற்கிறேன். அவர் தனக்காக வாழாமல், ஜெ.,க்காக வாழ்ந்தவர். அவருக்கு என, தனி வாழ்க்கை கிடையாது. அவர் பூரண உடல் நலத்துடன் சிறையிலிருந்து விடுதலையாகி வர வேண்டும்.
- தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா
'சென்னையில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதிகளில், நீங்கள் சொல்லும் நபர்களின் உறவினர்கள், ஏராளமான பங்களாக்களையும், நாடு முழுதும் சொத்துகளையும், நிறுவனங்களையும் வாங்கி குவித்துள்ளனரே... அவருக்கும் சொந்தமாக, பல பங்களாக்கள் இருக்கிறதே... பிறகு எப்படி, ஜெ.,க்காக மட்டுமே வாழ்ந்தார்ன்னு சொல்லி, தியாக சீலரா உருமாத்துறீங்க...' என, மடக்கத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேச்சு
பி.எச்டி., ஆய்வு படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டும் தான், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது, அநீதியாகும்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'நல்லது தானே... நன்றாக படித்தவர்கள் தானே, மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்றுக் கொடுக்க முடியும். தமிழக அரசின் முடிவு, வரவேற்கக் கூடியது தானே...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை
தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, தமிழக முழுக்க சுற்றி வருகிறோம். மக்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறோம். அவற்றை, தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம்.
- தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு
'முந்தைய தேர்தலுக்காக தயாரித்த அறிக்கையில் தெரிவித்த அம்சங்களே நிறைவேற்றப்படாத போது, புதிதாக தேர்தல் அறிக்கை தயாரித்து, அதை என்ன செய்யப் போகிறீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை ராயபுரம் தொகுதி, எம்.எல்.ஏ.,வான அமைச்சர் ஜெயகுமார், வரவிருக்கும் தேர்தலில், இந்தத் தொகுதியில் போட்டியிட மாட்டார்; வேறு தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை, தி.மு.க., தோற்கடிக்கும்.
- தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி
'ஜெயகுமார் மூளைக்கும், தி.மு.க.,வுக்கும் ஏதேனும் இணைப்பை ஏற்படுத்தியுள்ளீர்களா... மனதிற்குள் அவர் நினைப்பதை கூட சொல்கிறீர்களே...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மற்ற மாநிலங்களில், பா.ஜ., நிகழ்த்திக்காட்டிய பிரித்தாளும் சூழ்ச்சி, ஈ.வெ.ரா., மண்ணில் எடுபடாது. இங்கு கால் ஊன்ற நினைக்கும் அவர்கள் கனவு, ஒருபோதும் நிறைவேறாது.
- தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலர் கம்பம் செல்வேந்திரன்
'தமிழகத்தில், பா.ஜ., கால் ஊன்றி, எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. எந்தக் கட்சியிலும் இல்லாத பிரமுகர்கள், பா.ஜ.,வில் தான் உள்ளனர்...' என, நினைவுகூரத் துாண்டும் வகையில், தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலர் கம்பம் செல்வேந்திரன் பேட்டி
எங்கள் வேண்டுகோளை ஏற்று, தைப்பூச திருநாளுக்கு, விடுமுறை அறிவித்த, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு பாராட்டுகள். வரும், 27 முதல், நானும், தமிழக, பா.ஜ., பொறுப்பாளர் ரவியும், பழநியில்,காவடி ஏந்தி வழிபட உள்ளோம்.
- தமிழக பா.ஜ., தலைவர் முருகன்
'பழனிக்கு நுாறு காவடி எடுத்தாலும், தமிழகத்தில், தாமரை மலராது என, எதிர்க்கட்சியினர், 'மீம்ஸ்' வெளியிட, வாய்ப்பை ஏற்படுத்த உள்ளீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேச்சு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE