சுழன்றடித்து சி.எம்., ஓட்டு வேட்டை : உடைந்தது உடன்பிறப்பு மனக்கோட்டை| Dinamalar

சுழன்றடித்து சி.எம்., ஓட்டு வேட்டை : உடைந்தது உடன்பிறப்பு மனக்கோட்டை

Added : ஜன 26, 2021
Share
ஷாப்பிங் செய்வதற்காக, கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், சித்ராவும், மித்ராவும் நடந்து சென்றனர்.பாதசாரிகளுக்காக தனி பாதை ஏற்படுத்தும் வகையில், ரோட்டில் கலர் கலரா வர்ணம் பூசிக் கொண்டிருந்ததை பார்த்த மித்ரா, ''அடடே, ரொம்ப சூப்பரா இருக்கே. ஆனா, ஆர்.எஸ்.புரத்துல மாதிரி சாலை அமைக்கிற வேலைதான், இன்னும் முடியாம இழுத்துக்கிட்டே இருக்குது,'' என, அங்கலாய்த்தாள்.பேன்ஸி
 சுழன்றடித்து சி.எம்., ஓட்டு வேட்டை :  உடைந்தது  உடன்பிறப்பு  மனக்கோட்டை

ஷாப்பிங் செய்வதற்காக, கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், சித்ராவும், மித்ராவும் நடந்து சென்றனர்.பாதசாரிகளுக்காக தனி பாதை ஏற்படுத்தும் வகையில், ரோட்டில் கலர் கலரா வர்ணம் பூசிக் கொண்டிருந்ததை பார்த்த மித்ரா, ''அடடே, ரொம்ப சூப்பரா இருக்கே. ஆனா, ஆர்.எஸ்.புரத்துல மாதிரி சாலை அமைக்கிற வேலைதான், இன்னும் முடியாம இழுத்துக்கிட்டே இருக்குது,'' என, அங்கலாய்த்தாள்.பேன்ஸி ஸ்டோருக்குள் நுழைந்த சித்ரா, ஹேண்ட்பேக் தேர்வு செய்து கொண்டே, ''சி.எம்., பிரசாரக் கூட்டத்துக்கு போயிருந்தியே; 'ரெஸ்பான்ஸ்' எப்படி இருந்துச்சு,'' என கேட்டாள்.

''நம்ம மாவட்டத்துல, 10 தொகுதி இருக்கு; எல்லா தொகுதியிலும் பிரசாரம் செய்ற மாதிரி, பயணத் திட்டம் வகுத்திருந்தாங்க; 23 இடத்துல பேசினாரு; ரெண்டு நாளும் அசராம, கிட்டத்தட்ட, 350 கி.மீ., வேனில் பயணம் செஞ்சாரு,''

''இடத்துக்கு தகுந்த மாதிரியும், சூழலுக்கு தகுந்த மாதிரியும் சி.எம்., பேசுனதை கேட்டு, தி.மு.க.,வினர் மிரண்டு போயிட்டாங்க. கரும்புக்கடையில், சாதிக்பாட்சா மர்ம மரணத்தை பத்தி பேசுனாரு. இதை யாரும் எதிர்பார்க்கலை.தேர்தலே இன்னும் அறிவிக்கலை; வேட்பாளர் யாருன்னு சொல்லலை. அதுக்குள்ளேயே, ஆளுங்கட்சிக்காரங்க இறங்கி அடிக்கிறாங்களே... தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு பின்னாடி, நமக்கு தண்ணீ காட்டிடுவாங்க போலிருக்கேன்னு, எதிர்க்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,''

''ஏம்ப்பா, அப்படிச் சொல்றே; ஆளுங்கட்சி அதிருப்தி ஓட்டுகளை அள்ளி, ஈசியா ஜெயிச்சிடலாம்னு, தி.மு.க., காரங்க 'பிளான்' போட்டிருக்காங்களே,''

''அதெல்லாம், கொங்கு மண்டலத்துல நடக்குறதுக்கு வாய்ப்பில்லைன்னு தோணுது,'' என்ற மித்ரா, ''ஏன்னா, தேர்தல் பிரசாரத்தை முடிச்சிட்டு, சேலத்துக்கு கிளம்புற சமயத்துல, 'கொடிசியா' வளாகத்துல தொழில்துறையை சேர்ந்தவங்களை சந்திக்கறதுக்கு திட்டமிட்டிருந்தாங்க; தொழில்துறை முக்கிய பிரமுகர்களுடன், இரவு விருந்துக்கும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க,''

''தொழில்துறையினரை ராகுல் சந்திக்கிற விஷயம் கேள்விப்பட்டதும், அவசர அவசரமா, வெள்ளிக்கிழமை இரவே, முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் வேலுமணியும் அவங்களை சந்திச்சாங்க. இருவரும் வெளிப்படையா பேசுனதை கேட்டு, எல்லோரும் ஆடிப்போயிட்டாங்க,''

''அப்படியா, அப்படி என்னதான் பேசுனாங்க,''

''பழசை திரும்பிப் பாருங்க; 2011க்கு முன்னாடி, இந்த ஊர்ல ஏதாச்சும் வளர்ச்சி பணி நடந்திருக்கா; 2011க்கு பின்னாடி எவ்ளோ வேலை நடந்திருக்குன்னு யோசிச்சு பாருங்க. 10 வருஷத்துல, எங்க கட்சிக்காரங்க, யாராவது, உங்களை தொந்தரவு செஞ்சிருக்காங்களா; கட்சிக்கு நிதி கேட்டு மிரட்டி இருக்காங்களா,''

''இந்த கூட்டத்துல இருக்கற எத்தனை பேருடைய நிலத்தை அபகரிச்சிருக்காங்க. தொழில் சிறப்பா நடக்குறதுக்கு எவ்வளவு உதவி செய்றோம்னு, அமைச்சர் பேசியதை கேட்டு, தொழில்துறையினர் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க,''

''இதையெல்லாம் கேள்விப்பட்ட உடன் பிறப்புகள், கட்சி தலைமைக்கு 'ரிப்போர்ட்' கொடுத்திருக்காங்க. கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டைங்கிற விஷயத்தை, முதல்வரின் இரண்டு நாள் பயணத்துல, அழுத்தம் திருத்தமா பதிவு செஞ்சிருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க. அதனால, மறுபடியும் பிரசாரம் செய்றதுக்கு வர்றதா, ஸ்டாலின் தரப்பில் பதில் சொல்லியிருக்காங்களாம்,''

''முதல்வரும் மறு படியும் வரப்போறதா, ஆளுங்கட்சிக்காரங்க சொல்றாங்களே, உண்மையா?''

''அதுவா, ஜெ., பிறந்த நாளையொட்டி, அடுத்த மாசம் இரண்டாவது வாரம், பேரூர் செட்டிபாளையத்துல பிரமாண்டமா விழா நடத்தப் போறாங்களாம். சி.எம்., - டெபுடி சி.எம்., கலந்துக்குவாங்களாம்; 73 ஜோடிகளுக்கு தேவையான சீர் வரிசை வாங்குற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க,''

''அப்போ, எலக்சன் முடியுறவரை, ஆளுங்கட்சிக்காரங்க பம்பரமா வேலை செய்வாங்கன்னு சொல்லு,''

''அக்கா, தொண்டர்கள் வேலை செய்றதுக்கு தயங்க மாட்டாங்க. ஆனா, நிர்வாகிகள் முகத்தில் கவலை ரேகை ஓடிட்டு இருக்கு. உங்களுக்குதான் 'சீட்'டுன்னு சொல்லி, சி.எம்., வந்தப்ப, நிர்வாகிகள் சிலரை, செலவு செய்ய வச்சிருக்காங்க. மகளிர் குழுவுக்கு சேலை, சில்வர் குடம், பிளக்ஸ் பேனர், 'கட்-அவுட்', கட்சிக்கொடி தோரணம், வாழை தோரணம், கரும்பு, தென்னங்கீற்று நுழைவாயில்னு, கரன்சியை தண்ணீராய் செலவழிச்சு, தடபுடல் வரவேற்பு கொடுத்தாங்க,''

''பல லகரம் செலவாகிருச்சாம். இரவு நேரத்துல பிரசாரம் செஞ்ச இடங்களில், 'போக்கஸ் லைட்' மாட்டுறதுக்கே எகிறிடுச்சாம். மறுபடியும் சி.எம்., வரப்போறான்னு சொன்னதும், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், இப்பவே புலம்பிட்டு இருக்காங்க,''

''எம்.எல்.ஏ.,க்கள் வீட்டில் சி.எம்., சாப்பிட்டாராமே,''

''ஆமாக்கா, முதல் நாள் பிரசாரத்தன்னைக்கு, அம்மன் அர்ச்சுணன் வீட்டில் காலை உணவு, பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். இரண்டாம் நாள் பி.ஆர்.ஜி., வீட்டில் மதிய உணவு உட்கொண்டார். தேர்தல் வேலையை சுணக்கம் காட்டாம செய்யணும், கோஷ்டி அரசியல் இருக்கக் கூடாதுன்னு 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு,''

''இதையெல்லாம் கேள்விப்பட்டு, இதே மாதிரி நம்ம வீட்டுக்கெல்லாம் கட்சி தலைவர் வர மாட்டாரேன்னு, தி.மு.க.,காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''

''ஆளுங்கட்சி கூட்டத்துக்கு, அரசாங்க பஸ்களை முறைகேடா பயன்படுத்துனதா, எதிர்க்கட்சிக்காரங்க குற்றம் சாட்டுறாங்களே,''''அக்கா, கவர்மென்ட் பஸ்களை 'யூஸ்' பண்ணுனது உண்மைதான்! நானும் பல இடங்களில் பார்த்தேன். ஒப்பந்த அடிப்படையில், 'புக்' செய்து, ஒரு பஸ்சுக்கு, 4,000 ரூபாய் வீதம் பணம் செலுத்தியிருக்காங்க. 'கட்-அவுட்' வைக்கிறதுக்கு மட்டும், 4.5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சிருக்காங்கன்னா, எவ்வளவு கரன்சி புழங்கியிருக்கும்னு பார்த்துக்குங்க,''

''இருந்தாலும், ஜனங்களிடம் அதிருப்தி இருக்கறதை, மறைக்காதப்பா,'' என, நோண்டினாள் சித்ரா.

''நீங்க சொல்றதும் உண்மைதான்! முதல்வர் பிரசாரம் செஞ்சிட்டு, திரும்பிப் போற வரைக்கும் யாரும் கடைகளை திறக்கக் கூடாதுன்னு, போலீஸ்காரங்க தடை போட்டிருந்தாங்க; ஆட்டோ ஓட்டுறதுக்கு அனுமதிக்கலை; வாகன போக்குவரத்தையும் தடை செஞ்சிருந்தாங்க,''

''கோனியம்மன் கோவிலிலும், புலிய குளம் விநாயகர் கோவிலிலும் தரிசனம் செஞ்சாரு; அவர் வந்துட்டு, திரும்பிப் போற வரைக்கும், பக்தர்களை அனுமதிக்கலை. இதெல்லாம் சின்ன சின்ன பிரச்னையா தெரிஞ்சாலும், மக்களிடம் கசப்பை ஏற்படுத்தியது, வாஸ்தவம்தான்,''ஹேண்ட் பேக், வளையல், ஹேர்பின் வாங்கிக் கொண்டு, கடையை விட்டு வெளியே வந்த சித்ரா, ''பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மாதிரி, நம்மூரிலும் நடந்திருக்காமே,'' என, கேட்டாள்.

''அதுவா, மதுக்கரை ஏரியாவை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் வந்திருக்கு; வி.ஐ.பி., கவனத்துக்கு போலீஸ்காரங்க கொண்டு போயிருக்காங்க. வெகுண்டெழுந்த அவர், ஆளுங்கட்சி சம்பந்தமான எந்த வேலைக்கும் அந்த பிரமுகர் வரக் கூடாது; நிகழ்ச்சியிலும், கூட்டங்களிலும் கலந்துக்க கூடாதுன்னு தடா போட்டுட்டாராம்,''
''ஓ... அப்படியா, சமாசாரம்,'' என்ற சித்ரா, ''காங்., முன்னாள் தலைவரான ராகுலுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கலைன்னு கேள்விப்பட்டேனே,''

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். டில்லியில் இருந்து வந்திருந்த போலீஸ்காரங்களே கண்ணுல தெரிஞ்சாங்க; உள்ளூர் போலீஸ்காரங்க அதிகமா இல்லாதததால, காளப்பட்டி ஜங்ஷன்ல, ராகுல் இருந்த வேனுக்கு மிக நெருக்கமா, ஜனங்க வந்துட்டாங்க; கட்சிக்காரங்க பயந்துட்டாங்க; பிரச்னையில்லாம பிரசாரம் முடிஞ்சதால, பெருமூச்சு விட்டாங்க,'' என்றபடி, அருகாமையில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தாள் மித்ரா.

மின் விசிறிக்கு கீழிருந்த டேபிளை தேர்வு செய்து அமர்ந்ததும், எள்ளுப்பொடி ரோஸ்ட், பில்டர் காபிக்கு ஆர்டர் கொடுத்த சித்ரா, ''சீட் வாங்குறதுக்காக, பூனை மாதிரி, 'மாஜி' மேயர், சுத்தி சுத்தி வந்தாராமே,'' என கேட்டாள்.

''ஆமாக்கா, 'மாஜி' மேயர், சி.எம்., பிரசார வேனை, தனது காரில் தொடர்ந்து வந்தார். ஒவ்வொரு பிரசார மீட்டிங்கிலும், அவரது பெயரை உச்சரிச்சதுனால, நம்பிக்கையோடு இருக்காரு,'' என்றாள்.பில்டர் காபியை உறிஞ்சிய சித்ரா, ''ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரா இருந்த ரமேஷ்குமாரை, பணி விடுப்பு செஞ்சு, நாலு மாசமாச்சே; இன்னும் வேறு பணி ஒதுக்கலையாமே,'' என்றாள்.''அதெல்லாம் இருக்கட்டும். தேர்தல் வேலைக்காக, ஒரு அதிகாரியை சேலத்துக்கு மாத்தியிருக்காங்களாமே, அதைச் சொல்லு,''

''ஆமாக்கா, நம்மூரில் கோட்டாட்ச்சியரா இருந்த, 'லிங்கமான' அதிகாரியை, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு தேர்தல் அலுவலரா நியமிக்கக்கூடிய, 'போஸ்ட்டிங்'கிற்கு, 'டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X