புதுடில்லி: டில்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்செயல்கள் நடக்க துவங்கி உள்ளன . பல இடங்களில் கண்ணீர்புகை வீசி கூட்டத்தினரை கலைத்தனர். சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. காயமுற்றவர்கள் குறித்த விவரம் ஏதும் வெளிய வரவில்லை. டில்லியில் மேலும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சச்சூழல் எழுந்துள்ளது.
தற்போது, போலீசார் அனுமதி வழங்கிய பகுதியில் செல்லாமல், தடையை மீறிய விவசாயிகள், டில்லி செங்கோட்டைக்குள் நுழைந்துள்ளனர். அங்கு, அவர்கள் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றினர். இதனையடுத்து அங்குவிரைந்த போலீசார், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தொடர்ந்து, அங்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
வன்முறையை தொடர்ந்து, சிங்கு, காசிப்பூர், டிக்ரி, முகர்பா சவுக், நங்கோலாய் பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை தடை அமலில் இருக்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று (ஜன.,26), டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டில்லி நோக்கி படையெடுத்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதியளித்தனர்.

விவசாய சங்கங்கள், குடியரசு தின விழா முடிந்தபிறகு பகல் 11:30க்கு பேரணி துவங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் முன்னதாகவே 9 மணியளவில் சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் துவக்கினர். கஞ்சவாலா சொவுக் - ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி துவங்கியது.
டில்லி -ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்தனர் . குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்துவருவதால் பதற்றம் நிலவுகிறது.

டில்லிக்கு நுழைய சஞ்சய்காந்தி போக்குவரத்து நகர் வழியாக வந்த விவசாயிகள் தடுப்புகளை அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை வீசி கலைத்தனர். மேலும் சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE