புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் பல இடங்களில் தடையை மீறி டில்லிக்குள் நுழைந்தனர். இதனால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை விரட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரை,கத்தியை கொண்டு விவசாயிகள் தாக்க முயன்றனர். சில இடங்களில் டிராக்டரை ஏற்றி போலீசாரை கொல்ல முற்பட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், டில்லியில் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் போலீசார் அனுமதிவழங்கிய இடங்களில் செல்லாமல் மாற்று வழிகளில் சென்றனர். இதனையடுத்து அவர்களை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்தனர். அதனை தகர்த்து கொண்டு விவசாயிகள் செல்ல முயன்றனர். இதனையடுத்து கண்ணீர்புகை குண்டுகளை வீசிய போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
வடமேற்கு டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசிய போலீசார் தடியடி நடத்தினர்.

மத்திய டில்லியில் முக்கிய பகுதிகளான இந்திய வருமான வரி அலுவலகம், ஐஎஸ்பிடி பகுதிகளுக்குள் விவசாயிகள் தடையை மீறி நுழைந்தனர். இந்த பகுதிக்குள் நுழைய போலீசார் அனுமதி வழங்கவில்லை. சுமார் 20 கி.மீ., தூரம் தடையை தாண்டி விவசாயிகள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கலைக்க முயன்றனர். தடியடியும் நடத்தப்பட்டது.

அக்சர்தம் பகுதியில் விவசாயிகளை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதனை விவசாயிகள் தகர்த்து முன்னேறினர். இதனால், அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால், கோபமடைந்த விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த கத்தி மூலம் போலீசாரை தாக்க முயன்றனர். இதனையடுத்து, மீண்டும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, அவர்களை போலீசார் விரட்டினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

முக்கார்பவுர் சவுக் பகுதியில், போலீசாரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
விவசாயிகளுடன் ஏற்பட்ட மோதலில், ஒரு சில போலீசார் காயமடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE