'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற'எல்லாப் பேறுகளிலும் முதன்மையான பேறு நன்மக்களைப் பெறுவதே என்றும், குழல், யாழின் இனிமையைவிட இனிமையானது மழலைச் சொல் என்றும் வள்ளுவம் கூறுகிறது.
கருவிலிருந்து குழந்தைகளின் அனைத்து பருவத்திலும் உடனிருந்து, நல்ல உறுதுணையாய் இருப்பவர்கள் பெற்றோர். பண்படுத்திய நிலத்தில் தேர்ந்த பயிர் விளைவது போல் குழந்தைகளின் மனதில் பெற்றோர் நல்ல பகிர்வுகளை உருவாக்கினால் எதிர்காலத்தில் அவர்களிடம் நல்ல விளைவுகள் உருவாகும்.இளமையில் கற்றுக் கொடுப்பது உளவியல் ரீதியாக குழந்தைகளின் மனதில் நல்ல பதிவை உருவாக்கும். குழந்தைகளின் எண்ணத்திற்கும் செயலுக்கும் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கண்பார்வையற்ற ப்ரெயிலியின் பெற்றோர் அன்புடன், நட்புடன் மகனை வழிநடத்திச் சென்றதால் பார்வையற்றோருக்கு விழிகளாக ப்ரெய்லி என்னும் குறியீட்டு முறையை தந்தார். சிறுவயதிலேயே பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் தாயாரின் உறுதுணையோடு உலகிற்கு பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார். வீர சிவாஜிக்கு குழந்தையில் கூறப்பட்ட வீரமுள்ள கதைகளே சத்ரபதி சிவாஜியாக மாறுவதற்கு உதவியது. நரேந்திரன் சுவாமி விவேகானந்தராக மாறியதற்கு அவரின் பெற்றோரின் பங்களிப்பு முக்கிய காரணம். நல்ல குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோரின் பங்கே முதன்மையானதாகும்.
பகிர்வும் பங்களிப்பும்
குழந்தையின் முதல் பகிர்வு தாயின் கருவறையிலேயே தொடங்குகிறது. இரண்டாவது பகிர்வு குழந்தை பிறப்பிலிருந்து வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. பெற்றோரின் பங்களிப்பே குழந்தைகளின் ஆதார நாதம். ஏனெனில் குழந்தைகளின் பன்முக வளர்ச்சி பெற்றோரிடமிருந்து பெறப்படுகிறது.கருத்துச் செறிவான தாலாட்டுப் பாடலில் துவங்கி பண்பாடு, கலாசாரம், நீதி, வீரம் என அனைத்தையும் வெளிப்படுத்தும் கதைகள், குழந்தைகளின் விளையாட்டு, வீட்டு வேலையில் பகிர்வு என அனைத்து செயல்களிலும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களுடைய பகிர்வையும், பங்களிப்பையும் குழந்தைகளுக்கு அளித்தனர். அதனால் குழந்தைகள் உளவியல் ரீதியாக உடல்நலத்தோடு, மனபலத்தையும் பெற்றனர். இன்று காலச் சூழலால் கூட்டுக் குடும்பம் மாறி தனித்து வாழும் குடும்பம் உருவாகியுள்ளது. அன்பையும், பண்பையும், பணிவையும், அரவணைப்பையும் கற்றுக் கொடுத்த கூட்டுக் குடும்பம் குறைந்து விட்டதால் பெற்றோரின் அதிகமான பகிர்வு இன்றைய குழந்தைகளுக்குத் தேவைப்படுகிறது.
தேவையும் நிராகரிப்பும்
இன்றைய சூழலில் பெண்களும் வேலைக்குச் செல்வதால் உறவுகளை சந்திக்கும் நேரம் குறைந்து விட்டது. கிடைக்கும் நேரத்தில் கணினி, அலைபேசி, தொலைக்காட்சியுடன் நேரம் செலவிடப்படுகிறது. காலத்தே செய்யாத காரியத்தால் எந்தப் பயனும் இல்லை. கிடைக்கும் நேரத்தில் குழந்தைகளின் மனநிலை அறிந்து தகுந்த நேரத்தில் பகிர்வையும், பங்களிப்பையும் கொடுத்தால் பாதுகாப்பான சூழல் உருவாகும்.லியோனார்டோ டாவின்சி வரைந்த உலகப்புகழ் பெற்ற ஓவியம் “மோனலிசா” அழகாக இருப்பதற்குக் காரணம் கேட்ட போது, அவர் ஓவியத்திற்கு எது தேவையோ அதைமட்டும் மனதில் வைத்து வரைந்தேன் என்று கூறினார். அதுபோல் சிற்பியின் மனத்தெளிவும் மண்பாண்டம் செய்வோரின் பக்குவமும், ஓவியனின் ஒருமுகப்படுத்தும் மனமும் பெற்றோருக்கு இருந்தால் தான் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சிறப்பாக வடிவமைக்க முடியும். குழந்தையை உருவாக்கும் போது தேவையானதை கொடுத்து, தேவையற்றவைகளை நிராகரிக்கக் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் மாற்றங்களால் ஏற்படும் ஏமாற்றங்களை எதிர்கொள்வதற்கு பக்குவப்படுவார்கள்.
பக்குவமான மனப்பான்மை
உணவு, உடை, விளையாட்டுப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும் அன்று, அப்பொருட்களால் பயன் உண்டா என்பதை யோசித்து பெற்றோர் குழந்தைகளுக்கு வழங்குவார்கள். தேவை இல்லை என்றால் நிராகரித்து விடுவார்கள். பெற்றோருக்கு அன்பும், அக்கறையும் எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வும் இருந்ததால் குழந்தைகளுக்கு இளமையிலேயே தேவையானதை மட்டும் கொடுத்து, வளர்த்தார்கள். ஒவ்வொரு தேவையையும் பெறுவதற்குமுன் கால இடைவெளி கொடுத்தால் அந்தப் பொருள் தேவையா என்று யோசிக்கத் தோன்றும். ஆசைக்கு வாழாமல் தேவைக்கு வாழக்கற்றுக் கொடுத்தால், குழந்தைகள் பக்குவமான மனப்பான்மையை புரிதலோடு பெறுவார்கள். எல்லா நலனிலும் முக்கியமான நிதி நலனைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிய வைப்பது முக்கியம்.
கடமையும் கண்டிப்பும்
குழந்தை எனும் கட்டுமானம் சிறப்பாக, சிதையாது இருப்பதற்கு தாய் ஆணிவேராகவும், தந்தை அச்சாணியாவும் செயலாற்ற வேண்டும். குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கு இன்று பெற்றோர் தன் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ப்பு என்பது வேள்வி போன்றது. 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'என்பது பழமொழி.'தன் கையே தனக்கு உதவி'என்பதைக் கண்டிப்புடன் இளமையிலேயே கற்பிக்க வேண்டும். அன்று வீட்டில் குழந்தைகள் அதிகம் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் தன் தேவைகளை தானே பார்த்துக் கொண்டதால், பெற்றோரின் பளு குறைவாக இருந்தது.இன்று வளர்ந்த பிள்ளைகளின் வேலையையும் பெற்றோர் அன்பாக சுமப்பார்கள். சுமக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மையைக் கொடுக்கிறார்கள். தேவையில்லாத நேரத்தில் பெற்றோர்கள் தேவையின்றி சுமந்தால், பின்பு, பெற்றோர், குழந்தை இருவருமே துயரப் படுவார்கள்.
'கங்காருக்குட்டி ஒன்று தாயின் வெளிப்பையில் இருக்கும் போது அம்மா நான் இப்பொழுது வளர்ந்து விட்டேன், பையை விட்டு வெளியே குதிக்கலாமா' என்று கேட்டது. அதற்கு தாய் கங்காரு'இன்னும் முழுமையாக வளரும் வரை என் பையிலேயே இரு' என்று பாசத்தால் பதிலளித்தது. கங்காருக்குட்டியும், தாய் வயிற்றின் கதகதப்பில் சுகமாக வளர்ந்தது. குட்டி பெரிதாக வளர்ந்ததால் , தாய் கங்காருவுக்கு குட்டியை, பையில் தாங்க முடியவில்லை.
அதனால் குட்டியிடம் “என்னால் உனை இப்பொழுது சுமக்க முடிய வில்லை. என் பையிலிருந்து குதித்து விடு” என்றது. தாயின் கதகதப்பில் இருந்த குட்டி இறங்க மறுத்தது. நாளடைவில் குட்டியின் பாரம் தாங்காமல் தாய் கங்காரு இறந்தது. இக்கதை எதையும் காலத்தே செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறது. அதைப்போல் பெற்றோரும், நாணயத்தின் இருபக்கம் போல், கண்டிப்பையும், கடமையையும் காலத்தே செய்ய வேண்டும்.
'ஓரெட்டில் வளர்க்காத பிள்ளையும் ஈரெட்டில் கற்காத கல்வியும்'பயனற்றது.காலத்தில் காட்டாத அன்பும், காலமறிந்து கண்டிக்காத செயலும் பயனறிந்து கொடுக்காத பகிர்வும், கடலில் கலந்த நீருக்கு ஒப்பாகும். இப்பிறவியில் பெற்ற பயன்களை வைத்து முற்பிறவியில் செய்த செயலை அறியலாம் என்று மந்திரம் கூறுகிறது. இன்று பெற்றோர் கொடுக்கும் பகிர்வும், கண்டிப்புமே, குழந்தைகளின் எதிர்கால முதலீடாகும். பெற்றோரின் பங்களிப்பை தருவோம். குழந்தைகளுக்கு முதலீடாக்குவோம்.
- முனைவர் ச.சுடர்க்கொடி
கல்வியாளர்
காரைக்குடி.
94433 63865
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE