காங்.,கின் அவசர தேவை உட்கட்சி ஜனநாயகம்!| Dinamalar

காங்.,கின் அவசர தேவை உட்கட்சி ஜனநாயகம்!

Added : ஜன 26, 2021
Share
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், 22ம் தேதி டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சிக்கு முழு நேர தலைவரை, ஜூன் மாதத்திற்குள் தேர்ந்தெடுப்பது என முடிவாகியுள்ளது. அத்துடன் அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்ததும், மே 15 மற்றும் 30ம் தேதிகளில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்துவது என்றும், அதன்பின், கட்சித் தலைவர் தேர்தலை

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், 22ம் தேதி டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சிக்கு முழு நேர தலைவரை, ஜூன் மாதத்திற்குள் தேர்ந்தெடுப்பது என முடிவாகியுள்ளது. அத்துடன் அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்ததும், மே 15 மற்றும் 30ம் தேதிகளில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்துவது என்றும், அதன்பின், கட்சித் தலைவர் தேர்தலை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும், கட்சியின் தலைவராக இருந்த ராகுல், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார். இன்று வரை, அவரே அப்பதவியில் தொடர்கிறார். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, சில தரப்பில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தாலும், அதற்கு மேலிடம் செவிசாய்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக, அதாவது, 1998 முதல் 2017 வரை தலைவராக இருந்தவர் சோனியா.தற்போது, இடைக்கால தலைவராக தொடர்ந்தாலும், உடல்நலக் குறைவு காரணமாக, தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. தற்போது, கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக இருக்கும் ராகுல், கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என, நாடு முழுதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தும், அதற்கு ராகுல் செவிசாய்க்கவில்லை.

லோக்சபா தேர்தலில் தோல்வி கண்டது முதல், காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்தது. அத்துடன் உட்கட்சி பூசலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தலைவர்கள், 'ஜி 23' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ., வெற்றி பெற்று, தன் பலத்தை பெருக்கி வரும் நிலையில், காங்கிரஸ் செல்வாக்கு சுருங்கிக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலை நீடித்தால், 2024 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

கட்சித் தலைமை மீது நம்பிக்கை தெரிவிப்பதும், அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி, சம்பிரதாயமாக செயற்குழு கூட்டத்தை முடிப்பதுமே, காங்கிரசில் வழக்கமாக உள்ளது. அது, மாற்றப்பட வேண்டும். அதற்கு பதிலாக, கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதாவது, தீவிரமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு சாதகமாக, ஆதரவாக செயல்படும் நடைமுறையை மாற்றி, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்கவில்லை என்றால், தகுதியான மற்றொரு தலைவரை, ஜனநாயக முறைப்படி விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காங்கிரஸ் செயற்குழுவிலும், மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை நியமிப்பதற்கு பதிலாக, அமைப்பு ரீதியான தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். கட்சியின் முக்கிய அமைப்புகளுக்கு துதிபாடிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் .சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர்களும், இப்படியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அந்த அமைப்புக்கு தேர்தல் நடத்துவது அவசியம் என குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உட்பட சில தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும்.ஜனநாயக முறைப்படி புதிதாக ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து, அவரை தொலைநோக்கு பார்வையுடன் சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, அதன் வாயிலாக, கட்சியில் ஒவ்வொரு மட்டத்திலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே கட்சி புத்துயிர் பெறும். எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X