புதுடில்லி: எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், குடியரசு தினமான இன்று (ஜன.,26) டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. டிராக்டர்களை எடுத்துக் கொண்டு டில்லிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சித்தார்கள். அப்போது கலவரம் ஏற்பட்டது, போலீஸார் தடியடி நடத்தினர். விவசாயிகளும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த கலவரம் குறித்து காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. வன்முறையால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேதத்தை ஏற்படுத்தும். நாட்டின் நலனுக்காக விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,' என பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவு: மத்திய அரசின் அணுகுமுறையே விவசாயிகள் போராட்டத்தில் நடந்த போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது! வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE