புதுடில்லி: டில்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த இன்று (ஜன.,26) நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தின நாளான இன்று, விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 11:30க்கு பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்த நிலையில், முன்கூட்டியே பேரணியை துவக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். சுமார் 3 லட்சம் டிராக்டர்களில் நடத்தப்பட்ட இப்பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசாரின் தடையை தகர்த்து முன்னேறிச் சென்று செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.

இதனால் டில்லியில் பதற்றம் அதிகமானது. சில இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். கலவரம் நீடிக்கும் சூழலில், நள்ளிரவு 12 மணிவரை டில்லி முழுவதும் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லியில் இன்று நள்ளிரவு முதல் பார்லி., கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE