புதுடில்லி :முப்படைகளின் வலிமை, பாரம்பரிய கலாசார பெருமையை பறைசாற்றும் வகையில், நாட்டின், 72வது குடியரசு தின விழா பேரணி, டில்லியில் நேற்று கோலாகலமாக நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளுக்கு இடையே, வழக்கமான உற்சாகத்துடன் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. ரபேல் போர் விமானங்கள், முதல் பெண் போர் விமானி பங்கேற்றது, அனைவரையும் கவர்ந்தது.
நாட்டின், 72வது குடியரசு தினம், நேற்று, நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, டில்லியில் உள்ள ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. முப்படைகளின் வலிமையையும், நாட்டின் கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில், வண்ணமயமான அணிவகுப்பு சிறப்பாக நடந்தது.வழக்கமாக, குடியரசு தின விழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்த ஆண்டு, 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றி, விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும், 15 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அணிவகுப்பில் பங்கேற்ற படைகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.இதைத் தவிர, வழக்கமாக, செங்கோட்டை வரை, பேரணி நடக்கும். ஆனால், இந்த முறை, நேஷனல் ஸ்டேடியம் வரை மட்டுமே பேரணி நடந்தது.ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து வாங்கியுள்ள, 'ரபேல்' போர் விமானங்கள் முதல் முறையாக, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றன.
இதைத் தவிர, டி - 90 ரக பீரங்கிகள், சம்விஜய் எனப்படும் மின்னணு சாதனம், சுகோய் - 30 ரக போர் விமானங்கள், பார்வையாளர்களை கவர்ந்தன.முதல் முறையாக நம் விமானப் படையைச் சேர்ந்த பெண் போர் விமானியான, பாவனா காந்த் பங்கேற்றது, அனைவரையும் கவர்ந்தது.நம் ராணுவத்தின் ஒரே பெண் படைத் தலைவரான, கேப்டன் பிரீத்தி சவுத்ரி, தன் படைப் பிரிவின் அணிவகுப்பை வழிநடத்திச் சென்றபோது, கரகோஷம் எழுந்தது.
அலங்கார ஊர்திகள்
குடியரசு தின விழாவின் முத்தாய்ப்பாக, வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்தும் வகையில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள், அணிவகுப்பில் பங்கேற்றன.இதைத் தவிர, மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் சார்பில், ஒன்பது அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சிகளை, பிரதமர், நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அவருடன், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி, ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தளபதி, ஜெனரல் எம்.எம். நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப் படை தளபதி, ஆர்.கே.எஸ். பதுாரியா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை, ஜனாதி பதி, ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். தேசிய கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். தேசிய கீதம் இசைக்க, 21 குண்டுகள் மரியாதையுடன், நிகழ்ச்சி நிறைவடைந்தது.
டில்லியில் அயோத்தி
கொரோனா காரணமாக, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் மட்டுமே, பேரணியில் பங்கேற்றன.அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ஹிந்துக் கடவுள் ராமருக்கான கோவிலின் மாதிரியுடன் அமைந்திருந்த, உத்தர பிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தி வந்தபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். தமிழகத்தின் சார்பில், பல்லவர்களின் கட்டட கலையை வெளிப்படுத்தும் வகையில், மகாபலிபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. காற்று மாசு இல்லாத லடாக் அலங்கார ஊர்தி, பரவசப்படுத்தியது.நம் படைகளின் வலிமையை உலகுக்கு காட்டும் வகையில், முப்படைகளின் அலங்கார ஊர்திகள் அமைந்திருந்தன. போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., விக்ராந்த் மாதிரி, விமானப்படையின், 38 போர் விமானங்கள், டி - 90 பீஷ்மா பீரங்கி ஆகியவை, பிரமிக்க வைத்தன.
ரபேல் போர் விமானம், மணிக்கு, 900 கி.மீ., வேகத்தில் செங்குத்தாக பறந்து சென்றது, பார்ப்போரை புல்லரிக்க வைத்தது.கொரோனா வைரசால், குறைந்த நேரம், குறைந்த பார்வையாளர்கள் என, பல கட்டுப்பாடுகளுக்கு இடையே, குடியரசு தின விழா மிகவும் விமரிசையாக, வழக்கமான கோலாகலத்துடன், நாட்டின் பெருமையை உலகுக்கு காட்டும் வகையில் அமைந்திருந்தது.
மோடியின் தலைப்பாகை
ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவில், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, பிரதமர், நரேந்திர மோடி தான். வெள்ளை நிற பைஜாமா, குர்தா மீது, சாம்பல் நிற, மோடி கோட் அணிந்திருந்தார். சால்வை அணிந்திருந்த அவர் தலையில் சூட்டியிருந்த, ஆரஞ்சு நிற தலைப்பாகைதான், பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.
சுதந்திர தினத்தின் போது, செங்கோட்டையில் கொடியேற்றும்போது, ஒவ்வொரு ஆண்டும் மோடி அணியும் வித்தியாசமான தலைப்பாகைகள், எப்போதும் ரசிக்கதக்கதாக இருக்கும்.குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த, அரசக் குடும்பத்தினர் பரிசாக அளித்திருந்த, 'பகடி' எனும், தலைப்பாகையை, மோடி நேற்று அணிந்திருந்தார்.
வெளிநாடுகளிலும் கொண்டாட்டம்
நாடு முழுதும், கோலாகலமாக நடந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலும், குடியரசு தினத்தை, அங்குள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினர்.சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என, பல நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள், குடியரசு தினத்தை கொண்டாடினர். சீனாவின் பீஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியத் துாதர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் துாதரகத்தில், குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்தியத் தூதர் சுரேஷ் குமார், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கலாசார நிகழ்ச்சிகள், தேசப்பக்தி பாடல்கள் இசைப்பது போன்றவை நடந்தன.மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தின் தாகாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
போரிஸ் வாழ்த்து
இந்தியக் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்பதாக அவரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில், மரபணு உருமாறிய கொரோனா வைரஸ் பரவல், பிரிட்டனில் தென்பட்டது. அதையடுத்து, தனது பயணத்தை அவர் ரத்து செய்தார்.இந்த நிலையில், குடியரசு தினத்துக்கு, தன் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள, 'வீடியோ' செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:மிகவும் சிறப்பு வாய்ந்த அரசியல் சாசனத்தின் மூலம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக, இந்தியா விளங்கி வருகிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், உள்நாட்டில் உள்ள பணிகளால், பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் மிக விரைவில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வேன்.என்னுடைய நண்பர், பிரதமர், நரேந்திர மோடி உதவியுடன், கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வங்கதேசம் பங்கேற்பு
கடந்த, 1971ல், இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் முடிவில், வங்கதேசம் தனி நாடாக உருவானது. அதன், 50வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.இந்த நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்க, வங்கதேச ராணுவத்துக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, 122 வீரர்கள் கொண்ட வங்கதேச ராணுவக் குழுவும், நேற்று நடந்த அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE