சென்னை : சென்னை, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, இன்று கோலாகலமாக நடந்தது. 'பீனிக்ஸ்' பறவை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம், இரவிலும் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர், ஜெயலலிதா. அ.தி.மு.க., பொதுச் செயலராகவும், நான்கு முறை முதல்வராகவும் இருந்து, பல சாதனைகள் படைத்தவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், 2016 டிச., 5ம் தேதி மறைந்தார்.
அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிட வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சமாதிக்கு கிழக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, டிச., 6ல் அரசாணை வெளியிடப்பட்டது.

போட்டி
'ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், உலகளாவிய கட்டட கலைஞர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, வரைபடங்கள் பெற விளம்பரப்படுத்தப்பட்டு, எல்லாரும் பாராட்டும் வகையில், நினைவு மண்டபம் அமைக்கப்படும்' என, 2017 ஜூன் 28ல், முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.
அதன்படி, ஜெயலலிதா நினைவிடத்தை வித்தியாசமாக அமைக்க முடிவு செய்து, நினைவிடம் வடிவமைப்பு தொடர்பாக, பிரபல கட்டட நிறுவனங்கள் இடையே, போட்டி வைக்கப்பட்டது. அதில், ஆறு நிறுவனங்கள் பங்கேற்று, தங்களின் வடிவமைப்பு மாதிரி தோற்றத்தை சமர்ப்பித்தன. அவற்றில், 'பீனிக்ஸ் பறவை' மாதிரி வடிவத்தை, அரசு தேர்வு செய்தது.
பொன்மொழி
ஜெயலலிதா நினைவிடம் கட்ட, 2018 மே, 7ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார். அதன்பின், 50 ஆயிரத்து, 422 சதுர அடி பரப்பளவில், பொதுப்பணி துறை வாயிலாக, ஜெ., நினைவிடம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.ஜெ., நினைவிடத்தில், மூன்று கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், பீனிக்ஸ் பறவை தோற்றத்திற்குள் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் அருங்காட்சியகம், வலது பக்கத்தில் அறிவுசார் மையம் இடம் பெற்றுள்ளது.
ஜெயலலிதாவின் துணிச்சலான குணத்தை வெளிப்படுத்தவும், அவர் மறைந்தாலும், அவர் செயல்படுத்திய திட்டங்களால், இன்றும் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை பறைசாற்றவும், 'பீனிக்ஸ் பறவை வடிவம்' அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக கட்டட கலையை, உலக அளவில் புகழ் பெற வைக்கும் வகையில், முதன் முதலாக, பீனிக்ஸ் பறவை தோற்றத்தில், ஜெயலலிதா நினைவிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., இந்த கட்டமைப்பு உருவாக்கும் பணிகளில், முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தை, தமிழக அரசின் பொதுப்பணித் துறை திட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவினர், இரவு, பகல் பாராமல், இரண்டரை ஆண்டுகளாக உழைத்து, வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளனர். நினைவிடத்தில், விலை உயர்ந்த கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 'மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி' ஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
நினைவிட வளாகத்தில், புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது; ஏராளமான மலர் செடிகளும் நடப்பட்டுள்ளன.இரவில் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ள, ஜெ., நினைவிடத்தை, இன்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.'நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வினர் அனைவரும், குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்' என, முதல்வரும், துணை முதல்வரும், வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதையேற்று, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கட்சி நிர்வாகிகள், பெரும் திரளாக, ஜெ., நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நினைவிடத்தை திறந்து வைத்த பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இந்தியாவில் அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை பெற்றவர். முதல்வராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்தவர். ஜெயலலிதாவின் பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடிக்க வித்திட்டவர் ஜெயலலிதா. நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொது மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். நினைவிடம் கட்டுவதை தடுக்க பினாமி மூலம் வழக்கு போட்டவர் ஸ்டாலின். அந்த வழக்குகளை ஒரே நாள் இரவில் வாபஸ் பெற வைத்தார். ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை தடுக்க தீய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின். பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். ஜெயலலிதா ஆட்சி அமைத்து, இங்கு அஞ்சலி செலுத்த வீரசபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஜெயலலிதாவுக்கு இதய கோயில் கட்டி வைத்துள்ளோம். அது நினைவிடமாக மாறியுள்ளது. ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களுக்கு அட்சய பாத்திரமாக திகழ்ந்தார். இதனால், தான் ஜெயலலிதா ஆட்சி நீடிக்கிறது. இன்னும் நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் கட்டுமானத்திற்கு ஒப்புதல்!
இன்று திறக்கப்பட உள்ள, ஜெயலலிதா நினைவிடத்தில், கூடுதல் கட்டடங்கள் கட்ட, மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த வளாகம், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி ஒப்புதல் பெற வேண்டும். இத்திட்டத்துக்கு, 2018ல், மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.இதன்படி, 3.96 லட்சம் சதுரடி பரப்பளவு பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கூடுதலாக, 2,863 சதுர அடிக்கு, சில கட்டுமானங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டன.
இதற்காக, மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்திடம், பொதுப்பணித் துறை விண்ணப்பித்தது. சமீபத்தில் நடந்த, இந்த ஆணையத்தின் கூட்டத்தில், கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஜெ., நினைவிடத்தில் அணையா தீபம் அமைப்பது, அதை பராமரிப்பதில் சில அறிவுறுத்தல்களை, அந்த ஆணையம் வழங்கி உள்ளது.
நினைவு இல்லம் நாளை திறப்பு!
சென்னை, போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்து வந்த, 'வேதா நிலையம்' இல்லம், தமிழக அரசு சார்பில், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அதை, நாளை காலை, 10:30 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைக்க உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE