சென்னை : 'தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த,2016 டிச.5ல், ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜன., 27ல் ஜெ.,க்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும், ஜெ.,க்கு, உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால், ஜெ.,வின் நினைவகம் திறக்கப்படுவது, ஜெ.,க்கு செய்யும் துரோகம்.இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க.,தொண்டர்கள், ஜெ., விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், 'டிபாசிட்' வாங்க பயன்படும் என்பதற்காக, ஜெ.,வுக்கு நினைவிடம் கட்டித் திறப்பு விழா செய்கின்றனர். அ.தி.மு.க.,வுக்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர்.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஜெ., மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் என, அத்தனை கிரிமினல் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவோம் என்ற உறுதிமொழியை தமிழக மக்களுக்கு வழங்குகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, 103 வயதிலும், விவசாயம் செய்யும், கோவை பாப்பம்மாளுக்கு கிடைத்துள்ளது, தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கும் பெருமை. அவருக்கும், பத்மவிபூஷண்பத்மபூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற, தமிழக கலைச் செல்வங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள்' என, தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் பேச்சு
கோவை:''விவசாயிகளின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர்களை அழைத்து, மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோவை வந்தார். 'பத்மஸ்ரீ' விருது பெற்ற, விவசாயி பாப்பம்மாளுக்கு, தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: இன்னும் நான்கு மாதங்களில், ஆட்சி மாற்றம் வர உள்ளது. தி.மு.க., மக்களையும், நாட்டையும் காப்பாற்றும். குறிப்பாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை, விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களுக்கு துணையாக இருக்கும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்து, 60 நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர்.
போலீசார் தாக்குதல் நடத்தியதில் பலர் காயம் அடைந்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவசாயிகளை அழைத்து, மத்திய அரசு பேச வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE