முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தன், 70வது பிறந்த நாளை, வெளியூரில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் முடிவை, அவர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'தமிழக சட்டசபை தேர்தலில், என் பங்கு இருக்கும்' என, ஏற்கனவே மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். வரும், 30ல், தன், 70வது பிறந்த நாளை, மதுரையில், மு.க.அழகிரி கொண்டாடவில்லை. தன் குடும்பத்தினருடன், புதுச்சேரி அல்லது வெளியூரில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
அவரது ஆதரவாளர்கள், மதுரையில் உள்ள பார்வையற்றோர் இல்லம், முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். பிறந்த நாள் முடிந்த பின், என்ன முடிவை அழகிரி எடுக்கப் போகிறார் என, அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்., கழன்று சென்றால், தென் மண்டலத்தில் அழகிரியின் ஆதரவு தேவை. எனவே, 'ஐபேக்' ஆலோசனைப்படி, தி.மு.க.,வில் அழகிரியை சேர்க்க ஸ்டாலின் விரும்புகிறார். ஆனாலும், அவரை ஒரு சக்தி தடுத்து வருகிறது.
ஸ்டாலின் அழைப்பு விடுத்தால், கட்சியில் இணைய, அழகிரி தயாராகவே உள்ளார். அவரை இணைக்கவில்லை என்றால், இந்த தேர்தலில் நாங்கள் சும்மா இருக்க முடியாது. எனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு அழகிரி ஆதரவு தரலாம். இல்லையெனில், மூன்றாவது அணி அமைந்தால், அதற்கு ஆதரவு அளிக்கலாம். எதுவும் சரியாக அமையவில்லை என்றால், அமைதி காப்போம்.
இந்த நான்கு வழி தான் எங்களுக்கு இருக்கிறது. கண்டிப்பாக, ஒரு வழியை தேர்வு செய்யும் முடிவை அழகிரி எடுப்பார் என, நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE