ஐதராபாத் : ''நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் மகனுக்கு 'மஹாவீர் சக்ரா' விருது வழங்கப்பட்டதில் எனக்கு, 100 சதவீத திருப்தி ஏற்படவில்லை,'' என, ராணுவ கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா கூறினார்.
கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம் கடந்த ஜூன், 15ம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43க்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். உயிர் தியாகம் செய்த, 20 இந்திய வீரர்களில், தெலுங்கானாவை சேர்ந்த, கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர். அவருடைய தியாகத்தை கவுரவிக்கும் வகையில், ராணுவத்தின் உயரிய விருதான 'மஹாவீர் சக்ரா' விருது, சந்தோஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது.
இது பற்றி, அவரது தந்தை உபேந்திரா, ஐதராபாதில் கூறியதாவது: என் மகனுக்கு, மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டதில், எனக்கு, 100 சதவீத திருப்தி ஏற்படவில்லை. அவருடைய தியாகத்துக்கு, இன்னும் சிறப்பான மரியாதை அளித்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, சந்தோஷ் பாபுவுக்கு, 'பரம்வீர் சக்ரா' விருது வழங்கியிருக்க வேண்டும். என் மகன், ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு உத்வேகமாக செயல்பட்டுள்ளார்.

கடுங்குளிரை பொருட்படுத்தாமல், சீன ராணுவத்துடன் தைரியமாக போராடி, பல சீன வீரர்களை கொன்ற பின் தான், என் மகன் உயிர் தியாகம் செய்துள்ளார். சீனாவை விட இந்திய ராணுவம் வலிமையானது என்பதை அவர் உணர்த்தியுள்ளார். அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படும் என, எதிர்பார்த்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE