சென்னை : ''சட்டசபை தேர்தலில்,பா.ஜ.,வை சேர்ந்தவர்களை வெற்றி பெற வைத்து, சட்டசபையில் உட்கார வைப்பதே, நம் இலக்கு,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு, மாநில செயற்குழு கூட்டம், சென்னை தலைமை அலுவலகத்தில் நடந்தது. அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கர், தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசியதாவது: அரசு தொடர்புத் துறை, எதற்காக கட்சியில் உள்ளது என்றால், ஒவ்வொரு துறையிலும், கட்சியை கொண்டு போய் சேர்ப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது. கட்சி, நமக்கு பிரதானமாக உள்ளதோ, அதேபோல் பிரிவுகளும், ஆலமரத்தை தாங்கும் விழுதுகளாக இருக்கும். அதில், அரசு தொடர்புத் துறை முக்கியமானது.

மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், துாய்மை பாரதம் திட்டம் என, அனைத்து திட்டங்களிலும், அதிக பலன் பெற்றது, தமிழகம்.ஐந்து நாட்களாக, மத்திய மீன் வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் முகாமிட்டு, ஒவ்வொரு மீனவ பகுதிக்கும் சென்று, மீனவ திட்டங்களை துவக்கி வைத்துள்ளார்.
மத்திய அரசு, தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. கொரோனாவுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழகத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டு, இலவச தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை, உறுதி செய்துள்ளார்.
அரசு தொடர்புத் துறை பிரிவில் உள்ளவர்கள், பயனாளிகளுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக இருக்க வேண்டும்.வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்தவர்களை வெற்றி பெற வைத்து, சட்டசபையில் உட்கார வைப்பதே, நம் இலக்கு. அதற்கான பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் உள்ளது. இவ்வாறு, முருகன் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE