சென்னை : நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கி, 10 நாட்களாகியுள்ள நிலையில், 69 ஆயிரம் பேருக்கு மட்டுமே, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில், கோவிஷீல்டு, கோவாக்சின் என, இரண்டு தடுப்பூசிகளுக்கு, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்களுக்கு, இம்மாதம், 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், ஆறு லட்சம் சுகாதார பணியாளர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோ-வின்' செயலியில் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கு மொத்தமுள்ள, 160 மையங்களில், ஒவ்வொரு மையத்திலும், தலா, 100 பேருக்கு என, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. அதன்படி, 10 நாட்களில், 1.60 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுவதால், 69 ஆயிரத்து, 27 பேர் மட்டுமே, நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போட்டுள்ளனர்.இதே நிலை நீடித்தால், பொதுமக்களிடமும் தடுப்பூசிக்கு வரவேற்பு இருக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுகாதார பணியாளர்களிடம், தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், தடுப்பூசி போட்டு கொள்வதை தவிர்க்கும் சுகாதார பணியாளர்களுக்கு, மீண்டும் தடுப்பூசி போடுவதற்கு, முன்னுரிமை அளிக்கப்பட மாட்டது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE