தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என, அதன் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுக்கு, 2 ஏக்கர் நிலம் என கருணாநிதி அறிவித்தார். கூட்டுறவு வங்கி நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்றனர். செய்யவில்லை. இப்போது, மீண்டும் மக்களை ஏமாற்ற தயாராகி விட்டனர்.
- அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்
'நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மலைக்கள்ளன் என்ற படத்தில், எம்.ஜி.ஆர்., பாடும், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற, பாடல் தான் நினைவுக்கு வருகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டி.
சிறையில் சசிகலா சாதாரண வகுப்பில் தான் இருந்தார். அவருக்கு முதல் வகுப்பு பெற, சில ஆவணங்கள் தேவை. ஆனால், அவற்றைக் கொடுக்க, அவரின் சொந்தங்கள் முன்வரவில்லை. பலர், தெரியாமல் பேசுகின்றனர். சசிகலாவின் சொந்தங்கள், சொத்துக்களுக்காக அலைகின்றனரே தவிர, அவருக்கு நல்லது செய்ய வரவே இல்லை.
- அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி
'அடப்பாவமே... அப்படியா நிலைமை போயிட்டுக்கு இருக்கு; அப்போ, பணத்துக்கும், அதிகாரத்திற்கும் தான், அந்த அம்மாவை சுற்றி இருந்தனரா...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.
எங்கள் கட்சி, நம் இந்தியர்களுக்கானது. நாட்டை வளமாக, செழிப்பாக, தொழில் வளமிக்கதாக, அறிவு சார்ந்த சமூகமாக உருவாக்குவதே இக்கட்சியின் நோக்கம்.
- ஹிந்துஸ்தான் தேசிய கட்சி செயல் தலைவர் சீனிவாசன் ராஜாஜி
'கண்டிப்பாக நிறைவேறாது. எல்லா கட்சியும், காலம் காலமாக இப்படித் தான் சொல்லி, ஆட்சியைப் பிடித்து, தங்கள் வளங்களை பெருக்கிக் கொண்டன. இன்னும், நுாறு பேர் கட்சி துவக்கினாலும், உங்கள் கொள்கை நிறைவேறாது...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்துஸ்தான் தேசிய கட்சி செயல் தலைவர் சீனிவாசன் ராஜாஜி பேட்டி.
சிதம்பரம் மருத்துவக் கல்லுாரியில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்கக் கோரி, ௪௬ நாட்களாக பெற்றோர், மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை, அரசு அலட்சியப்படுத்தினால், தமிழக காங்கிரசும் போராட்டக் களத்தில் குதிக்கும்.
- தமிழக காங்., தலைவர் அழகிரி

'வேற வேலையே உங்களுக்கு இல்லையா; போராடும் மாணவர்களுக்கு, கோரிக்கைகளை வேறு விதங்களில் நிறைவேற்ற, புத்திமதி சொல்லுங்கள்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.
தமிழகத்தில், மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், எங்கள் கட்சி உள்ளது. எங்கள் கூட்டணி, 234 தொகுதிகளில் வெற்றி பெறும்.
- இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன்
'தி.மு.க.,வின் புதிய நிலைப்பாட்டை பார்க்கும் போது, அல்லறை, சில்லறை கட்சிகளை கழற்றி விட்டு, தனித்து போட்டியிட்டு விடும் போலிருக்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி.
எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்பி வருகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை, முன்கூட்டியே அறிந்து, அதை அரசு நிறைவேற்றி வருகிறது.
- அமைச்சர் வீரமணி
'பிற மாநிலங்களில், 'அம்மா'வின் ஆட்சி இல்லாததால் தான் இந்த பரிதாப நிலையா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி பேச்சு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE