புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று (ஜன.,26) விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 86 போலீசார் காயமடைந்தனர். செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு, தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர். விவசாயிகள் பேரணி வன்முறையானதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.

டில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE