சென்னை: ஜெயலலிதாவின் பாதையில், தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது என முதல்வர் பழனிசாமி கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இந்தியாவில் அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை பெற்றவர். முதல்வராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்தவர். ஜெயலலிதாவின் பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடிக்க வித்திட்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் உலகளவில் பாராட்ட பெற்றதுடன், பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை தந்தவர். உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார்.பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை நிறைவேற்றியவர்
நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொது மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். நினைவிடம் கட்டுவதை தடுக்க பினாமி மூலம் வழக்கு போட்டவர் ஸ்டாலின். அந்த வழக்குகளை ஒரே நாள் இரவில் வாபஸ் பெற வைத்தார். ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை தடுக்க தீய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின். பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். ஜெயலலிதா ஆட்சி அமைத்து, இங்கு அஞ்சலி செலுத்த வீரசபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஜெயலலிதாவுக்கு இதய கோயில் கட்டி வைத்துள்ளோம். அது நினைவிடமாக மாறியுள்ளது. ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களுக்கு அட்சய பாத்திரமாக திகழ்ந்தார். இதனால்தான் ஜெயலலிதா ஆட்சி நீடிக்கிறது. இன்னும் நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE